அண்ணாமலைக்கு சீட் கிடைக்குமா? புறக்கணிப்பா? நயினார் நாகேந்திரன் பதில் என்ன?

Published On:

| By Mathi

Nainar Annamalai BJP

தமிழக பாஜகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் அண்ணாமலை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று மார்ச் 31-ந் தேதி செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஆளுங்கட்சியின் கடும் அதிருப்தியை மக்கள் மனதிலே இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23-ந் தேதி எப்போது வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்ற நாளை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

செய்தியாளர்களின் கேள்விகளும் நயினார் பதில்களும்

கேள்வி: எடப்பாடி பழனிசாமி வந்திருந்தாங்களே சார், பாஜக தலைவர் என்ற முறையில் திருநெல்வேலியில் அவரை சந்தித்தீர்களா?

நயினார் நாகேந்திரன்: இல்லை, அன்றைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்கள். அதனால கோயம்புத்தூருக்கு நான் அவர்களை வரவேற்று அங்க அவருடைய நிகழ்ச்சியில கலந்து கொள்ள வேண்டியிருந்த நாள் அங்க கலந்து கொள்ள முடியல. ஆக அவர்களை சந்திக்கவில்லை, ஏற்கனவே அதற்கு முன்பு நாங்கள் இரண்டு மூணு நாளைக்கு முன்பே சந்தித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

கேள்வி: வேட்பாளர் பட்டியல் எப்ப வருது சார்?

நயினார் நாகேந்திரன்: தமிழகத்தினுடைய தேர்தல் பொறுப்பாளர் மதிப்பிற்குரிய பியூஷ் கோயல் ஜி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து எல்லா பணிகளும் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

கேள்வி: திருநெல்வேலியோட செல்லப்பிள்ளை நீங்க, சாத்தூருக்கு போறதா சொல்லிருக்கீங்க, என்ன நடக்குது சார்? என்ன நடந்தது?

நயினார் நாகேந்திரன்: இல்ல, எங்க நின்னாலும் திருநெல்வேலியுடைய செல்லப்பிள்ளை தானே. “டெல்லிக்கு ராஜா ஆனாலும் பள்ளிக்கு பிள்ளை” மாதிரி திருநெல்வேலி தொகுதி மக்களை வாழ்நாள் உள்ள வரையிலும் என்றுமே மறக்க முடியாது.

கேள்வி: தொகுதி மாற முடிவு செய்ததற்கு என்ன காரணம்?

நயினார் நாகேந்திரன்: இல்ல இல்ல, நான் ஏற்கனவே பலமுறை போட்டியிட்டு இருக்கிறேன். இந்த முறை அண்ணா திமுக போட்டியிட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதனுடைய அடிப்படையில் இன்று அண்ணா திமுக இந்த முறை போட்டியிடுகிறது. அண்ணா திமுக போட்டியிட்ட சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். எந்த இடத்திற்கு போனாலும் தமிழகம் முழுவதும் மக்கள் பணி தொடரும். அதிலும் திருநெல்வேலி தொகுதிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: எப்ப நாமினேஷன் பண்றாங்க? மற்ற கட்சிகள்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

நயினார் நாகேந்திரன்: மத்திய தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வந்த பிறகு, வேட்பாளர் பட்டியல் அறிவித்த உடனடியாவே பண்ணுவாங்க. ஏன்னா 2 நாட்கள் தான் இருக்கிறது. அந்த 2 நாட்களில் நிச்சயமாக தொடர்ந்து வேட்பாளர்கள் அவர்களுடைய மனுத் தாக்கலை செய்வார்கள்.

கேள்வி: மாநிலக் கட்சிகள் எல்லாமே வேட்பாளரை அறிவிச்சு புலிப் பாய்ச்சல்ல போயிட்டு இருக்கிறதா கிளைம் பண்ணிக்கிறாங்க. தேசிய கட்சிகள் காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி வேட்பாளர் அறிவிப்புல இவ்வளவு தாமதம் பண்றீங்க?

நயினார் நாகேந்திரன்: இல்ல, தாமதத்திற்கு ஒரு காரணம் இல்லை. இன்னும் 2 தினங்கள் தான் இருக்கிறது. மனுத் தாக்கலால் எந்த புலிப் பாய்ச்சலும் வரப்போறதில்ல.

கேள்வி: தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகிறது? அண்ணா திமுக கூட்டணியில 27 தொகுதிங்கிறது பாரதிய ஜனதா கட்சியினுடைய தகுதிக்கு ஏற்ற இடம்தானா? இல்ல அதைவிட இன்னும் கூடுதலாக போட்டியிடக் கூடிய நிலையில பாஜக இருந்ததா? ஏன் 27 தொகுதிகளோட நின்னுகிட்டீங்க? காங்கிரசைவிட கூடுதலாக இடம் பெறுவோம்னு சொல்லியிருந்தீங்க?

நயினார் நாகேந்திரன்: அதாவது இதுல தகுதி என்பது முக்கியமல்ல, எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம் தான் முக்கியம். மக்களுடைய எண்ணம் எதுவோ அதற்கு ஈடு கொடுக்க வேண்டும். மக்கள் இன்றைக்கு இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்றைக்கு புதிதாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் சார் இல்லை. இப்பொழுது அவர்களுக்கும் நாங்கள் இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சோ எல்லாரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கை பாகுபாடு அமைந்திருக்கிறதே தவிர வேறொன்றும் கிடையாது.

கேள்வி: ஒரே நாள்ல கட்சி மாறினவங்களுக்கெல்லாம் பல கட்சியில உடனே சீட் வழங்கப்படுது, எப்படி பார்க்குறீங்க சார்?

நயினார் நாகேந்திரன்: அது அவங்களுடைய கட்சியை பொறுத்தது. அவங்க கட்சியில வந்து நிறைய வேக்கன்ட் (vacant) இருக்கு. அப்புறம் மக்களுடைய எதிர்பார்ப்பு அந்த கட்சியில இல்லை. அதனால ஒரே இரவுல ஒரு ஆள் தனியா வந்தாலும் அவர்களுக்கு சீட் கொடுக்குறாங்க.

கேள்வி: பாஜகவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களுக்கு தொகுதி ப்ராப்பரா அலார்ட் பண்ணல (properly allotted) என்ற மாதிரி பாஜகவுக்குள்ள ஒரு அதிருப்தி இருக்கிறதாவும் சொல்றாங்க?

நயினார் நாகேந்திரன்: பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த மட்டிலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கக்கூடிய தொண்டர்கள் நிறைந்த கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி. கொள்கைக்காகவும், இந்த நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் உழைக்கின்ற தொண்டர்களை அதிகமாக பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி. அதுல அவர்களுக்கு எந்தவிதமான அதிருப்தியும் நிச்சயமாக இருக்காது.

அண்ணாமலை புறக்கணிப்பா?

கேள்வி: கோவையில் பிரதமரை வரவேற்கக்கூடிய நிகழ்வில் அண்ணாமலை பெயர் இடம்பெற்றதா? மோடியை சந்திக்கும் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது என்றெல்லாம் சர்ச்சையாக இருக்கிறதே?

நயினார் நாகேந்திரன்: இல்லைங்க, அவருடைய பெயர் இருந்தது. அன்றைக்கு நான் போன் பண்ணேன், அவர் ஊர்ல இல்லைன்னு சொன்னாங்க. ஊர்ல இல்லாததுனால வரல. நான் கூட இப்போ 4-ந் தேதி மனுத்தாக்கல் பண்ண வேண்டியது இருக்குது. 4-ந் தேதி பிரதமர் வருகிறார்கள். நான் அங்க இருக்க வேண்டுமா அல்லது மனுத்தாக்கல் செய்யணுமாங்கிறது கேட்டுக்கிட்டு அது மாதிரி சூழ்நிலை இருக்கு.

திமுக அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கேள்வி: பாஜக தேர்தல் அறிக்கை எப்போ வரும்?

நயினார் நாகேந்திரன்: இன்று மாலையில் திமுக மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்றாங்க. பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பியூஷ் கோயல் தலைமையிலே ஒரு பெரிய குற்றப்பத்திரிகை நாங்க தாக்கல் செய்றோம். என்ன குற்றப்பத்திரிகை அப்படின்னாக்க, இந்த 5 ஆண்டுகளில் சொன்ன தேர்தல் வாக்குறுதி எதையும் செய்யல. அதுக்கு பதிலா சட்ட ஒழுங்கு சரியா செய்யல. எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை பொருட்கள் எல்லா இடங்களிலும். இன்னைக்கு காலையில கூட ஆஸ்பத்திரில 10 வயசுக்கு போட வேண்டிய ஊசியை நாலு வயசுக்கு போட்டு அந்த பையன் இறந்திருக்கான் சென்னையில. 10 வயசு குழந்தைக்கு போட வேண்டிய ஊசியை நாலு வயசுக்கு போட்டா அவனுடைய உடம்பு எப்படி தாங்கும்? போலீஸ் அடிச்சு துரத்துறாங்க. பத்திரிகை சுதந்திரம் இல்லை. இந்த நாட்டுல முதலமைச்சரை பற்றி பேசினால் உடனே கைது செய்றாங்க. ஆனால் மோடியை பற்றி பேசினால் கொலை செய்வேன் கூட சொன்னாங்க.

பாரத பிரதமர் மோடியை இன்னைக்கு உலகத்தில், உலக அரங்கில் இன்னைக்கு ஈரான் வழியா எந்த கப்பலும் போக முடியாம, எந்த விமானமும் பறக்க முடியாம… ஆனா இவ்வளவு மோசமான சூழ்நிலையில ஈரான் நாட்டு மேல ஒரு விமானம் பறந்து போகுது. அதை நீங்க எடுத்து பார்த்தா, நெட்ல எடுத்து பார்த்தா எந்த விமானம்னு பார்த்தா ஏர் இந்தியான்னு போட்டுருக்கு. உலகமே இன்னைக்கு அக்கப்போர்ல இருக்கு. தமிழ்நாடு பெரிய அக்கப்போர்ல சிக்கி தவிக்குது திமுக அரசாங்கத்தால. ஆனா உலகத்துல நடந்த போர்ல ஈரான் நாட்டு மீது ஒரு விமானம் பறக்குது. எந்த விமானம்னு பார்த்தா ஏர் இந்தியா. இன்னைக்கு எல்லா இடங்களுக்கும் இன்னைக்கு கப்பல் வருது அந்த வளைகுடா வழியா. அப்பேர்ப்பட்ட தலைவர் மோடி, நம்ம நாட்டுல நம்ம நாட்டுடைய தலைவர், நம்ம நாட்டுடைய பிரதமர். அவரை கொலை செஞ்சிடுவேன்னு ஒரு திமுககாரன் பேசியிருக்காங்க, நடவடிக்கை இல்லை.

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்

இப்போ வனவாசம் யாருக்கு என்று சொன்னால் வரக்கூடிய 23-ஆம் தேதி தெரியும். ஆக மிக மோசமான ஆட்சி. சரி, இன்னைக்கு 56 சமுதாயம் எக்கனாமிக்கலி வீக்கர் செக்ஷன் (Economically Weaker Section). 56 சமுதாயத்திற்கும் எக்கனாமிக்கலி வீக்கர் செக்ஷன், 10 சதவீத இட ஒதுக்கீடு ஃபார்வர்ட் கம்யூனிட்டி (Forward Community). அதுல பிள்ளைமார் இருக்கிறாங்க, பிராமணர் இருக்கிறாங்க, செட்டியார் இருக்கிறாங்க, ஆசாரி இருக்கிறாங்க, ஏன் முஸ்லிம் கூட இருக்கிறாங்க. 10 சதவீத இட ஒதுக்கீடு இந்த அரசாங்கம் கொடுக்கல தமிழ்நாட்டுல. மத்திய அரசாங்கம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கு. திருநெல்வேலி தொகுதியில இன்னைக்கு நிறைய பேர் படிச்சு போஸ்ட் ஆபீஸ்லயும், ரயில்வேலயும் அந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுல வேலைக்கு போயிருக்காங்க.

இங்க திமுக அரசாங்கம், திமுக அரசாங்கம் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கி வச்சுருக்கு. எவ்வளவு பெரிய கொடுமை! மத்திய அரசு ஒரு சலுகையை கொடுக்குது. ஃபார்வர்டு கம்யூனிட்டியில பிள்ளைமார் சமுதாயம், பிராமின், செட்டியார் மற்றும் இஸ்லாமிய சமுதாயம் உட்பட அதுல இருக்காங்க, 10% இட ஒதுக்கீடு. இதையும் எதிர்த்து கோர்ட்டுக்கு போனது திமுக அரசாங்கம், நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள். ஆனா இப்போ ஓட்டு கேக்குறதுக்கும் இன்னைக்கு பிள்ளைமார் சமுதாயத்துட்டயும், பிராமின், செட்டியார், இஸ்லாமியர்ட்ட ஓட்டு கேக்குறதுக்கும் அவங்க வந்துகிட்டு இருக்காங்க. இதப் பாத்துட்டு எப்படி ஓட்டு போடுவாங்க அவங்க?

இவ்வளவு மோசம் இங்க பார்த்தீங்கன்னா லாக்-அப் டெத். சாத்தான்குளத்துல ரெண்டு பேர அடிச்சுக் கொன்னாங்க. தமிழ்நாடு முழுதும் ஐயோ ஐயோ ஆத்தாடி ஐயாடினு ஒரே கூப்பாடு போட்டாங்க. இன்னைக்கு 32 லாக்-அப் டெத் மரணம். சிவகங்கையில ஒரு போலீஸ் அதிகாரி, முதலமைச்சருக்கு வேண்டிய போலீஸ் அதிகாரி சொன்னதுனால அடிச்சுக் கொன்னுட்டாங்க. என்ன நடந்தது? ஒன்னும் நடக்கல.

இவ்வளவு பெரிய கொடுமை கஞ்சா. பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகள் போக முடியல. எல்லாருமே கஞ்சா போட்டுட்டு எங்க ஸ்கூல் வாசல்ல முன்னாடிலாம் பாத்தா இந்த ‘ரீ ரீ ரீ’ன்னு ஒரு ஐஸ்கிரீம் சுத்தி வித்துட்டு இருப்பான். இப்போ ‘கஞ்சா கஞ்சா கஞ்சா’ன்னு சுத்திட்டு இருக்காங்க இப்போ. யாரு பிடிக்கிறாங்க? போலீஸ் பிடிக்கிறாங்களா? பொறுப்பு டிஜிபி இருக்காங்களா? ஊடகங்கள் நீங்க தொடர்ந்து சொல்றீங்களா? இல்ல. நயன்தாரா மீதுன்னா ‘டங் டங் டங்’ன்னு போட்டு அடிக்கிறாங்க காலையிலிருந்து சாயங்காலம் வரை. ஆனா மீடியாக்கள் திமுக பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க.

திமுக தேர்தல் அறிக்கை

கேள்வி: வேட்பாளர் பட்டியல் இன்னைக்கு வெளியாகுறதுக்கு வாய்ப்பு இருக்கிறதா? திமுக-வோட தேர்தல் அறிக்கை பற்றி..

நயினார் நாகேந்திரன்: போன தேர்தல் அறிக்கை திமுக-வுக்கு அது ஹீரோ மாதிரி, இந்த தேர்தல் அறிக்கை சீரோ (Zero). இந்த தேர்தல் அறிக்கை ஹீரோவும் இல்ல, ஹீரோயினும் இல்ல, ஹெராயின் தான் நடக்குது தமிழ்நாட்டுல. ஹீரோயின் இல்ல, அவ்வளவும் ஹெராயினா நடக்குது தமிழ்நாட்டுல. மதிப்புக்குரிய சகோதரி கனிமொழி அவர்களே சொல்லிட்டாங்க, எத்தனை தடவை ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்றது அப்படின்னு.

தேர்தல் அறிக்கையில என்ன சொன்னாங்க? மின்கட்டணத்தை கூட்டமாட்டோம்னு சொன்னாங்க, சொத்துவரி கூட்டமாட்டோம்னு சொன்னாங்க. 300% கூட்டிருக்காங்க. மின்கட்டணம் 300% கூட்டிருக்காங்க. 300% கூட்டீட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை இருக்கக்கூடிய மின்கட்டணத்தை ஒரு மாசத்துக்கு ஒருமுறை எடுப்போம்னு சொன்னாங்க. செஞ்சாங்களா? ஆல்வின் கரெக்டா சொல்றாரு ‘செய்யல’ன்னு. செய்யல, ஆல்வின் மட்டும் இல்ல, நாடே சொல்லுது இன்னைக்கு. யாருமே செய்யல இன்னைக்கு, எல்லாம் ஏமாத்து வேலை.

சரி, 1000 ரூபாய் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு 5000 ரூபாய் கொடுத்திருக்காங்க. கோடைக்கால விடுமுறை..கோடைக்கால விடுமுறை இந்த 5 வருஷமா கோடைக்கால விடுமுறையே வரல. என் தம்பி பாக்குறாரு, சன் டிவில பாக்குறாரு. கோடைக்கால விடுமுறை இந்தத் தடவை மட்டும்தான் வந்திருக்கு. ஆனா ஒட்டுமொத்தமா தமிழ் மக்கள் இனிமேல் உங்களுக்கு ஒட்டுமொத்தமான விடுமுறை கொடுத்துருவாங்க. இன்னைக்கு கருத்துக்கணிப்பு வந்திருக்கு, 180 இடங்களுக்கு மேல தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கணும்னு ஒரு கருத்துக்கணிப்பு மத்தியிலிருந்து வந்திருக்கு. ஆனா என்னுடைய கருத்துக்கணிப்பு 200 இடத்துக்கு மேல போய் வெற்றிபெறும்ங்கிறதுதான் என்னுடைய கருத்துக்கணிப்பு.

அண்ணன் எடப்பாடியார் அவங்க 2000 ரூபாய் கொடுக்கணும்னு சொன்னாங்க, உடனே நானும் 2000 ரூபாய் கொடுக்கிறேன்றாரு. அதுக்கப்புறம் பிரிட்ஜ் கொடுப்போம்னு அதிமுக சார்பா சொன்னாங்க, நாங்க பிரிட்ஜுக்கு பதிலா டோக்கன் கொடுக்கிறோன்றாங்க. எவ்வளவு ஏமாத்து வேலை இது! சரி, பல அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என்ன ஆச்சு? பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு என்ன ஆச்சு? தாரேன்னு சொன்னாங்களா தேர்தல் அறிக்கையில? இப்போ தந்திருக்காங்களா? தரல. அதுக்கும் டோக்கன் தான். ஆனா அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டாங்கன்னு நான் நினைக்கிறேன். இந்தத் தேர்தல்ல பணி செய்யும்போது நிச்சயமா வச்சு வேலை பார்ப்பாங்க என்கிறது தான் என்னுடைய கருத்துக்கணிப்பு.

கேள்வி: திமுக மேல குற்றச்சாட்டு சொல்றேன்னு சொல்றீங்க, வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு மொத்தத்துல நாமினேஷனுக்கு. இன்னைக்கு வெளியாகுறதுக்கு வாய்ப்பு இருக்குதா?

நயினார் நாகேந்திரன்: 4-ந் தேதி எங்களுடைய ஆட்கள் எல்லாரும் வேட்பு மனு தாக்கல் செய்வாங்க.

அண்ணாமலைக்கு சீட்?

கேள்வி: தமிழக முதல்வர் வந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குறார். தேர்தல் பிரச்சாரம் போகக்கூடிய திமுகவினர், கடந்த 5 கால சாதனையை காலரைத் தூக்கிவிட்டு மக்கள்கிட்ட ஓட்டுக் கேளுங்கன்ற மாதிரி முதல்வர் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காரு. இதுவரை இல்லாத வரலாற்று வெற்றியை திமுக கூட்டணி வெற்றி பெறும்னு சொல்லி இருக்காரு.

நயினார் நாகேந்திரன்: அந்த டெய்லர் அப்படி துணியைத் தப்பா தச்சுக் காலரைத் தூக்கிவிட்டு தச்சுருவான்னு நினைக்கிறேன். இவ்வளவு நேரம் நான் பேசுனதைக் கேட்டுட்டும் காலரைத் தூக்கிவிட்டா, மக்கள் காலர் இல்ல, கழுத்தையே வெட்டிருவாங்க.

கேள்வி: அண்ணாமலை பெயர் வேட்பாளர் பட்டியல்ல உண்டா? நயினார் நாகேந்திரன் கூட?

நயினார் நாகேந்திரன் என்னுடைய பெயர் கூட எங்களுடைய அகில இந்திய பார்லிமெண்ட் போர்டு தான் முடிவு செய்யும்.

கேள்வி: தமிழகம் இதுவரை கண்டிராத வெற்றியை திமுக கூட்டணி வெற்றி பெறும், மதச்சார்பின்மையும்…

நயினார் நாகேந்திரன்: அதை அப்படியே மாத்திப் போடுங்க. எங்களுடைய தேர்தல் ஜனநாயகக் கூட்டணிதான் கண்டிராத வெற்றியைப் பெறும். ஆனா மதச்சார்பு மதச்சார்புன்னு சொல்லிட்டு, எல்லா மதத்துக்கும் நாங்கதான் பாதுகாப்புன்னு சொல்லிட்டு, ஒரு மதம் சார்ந்து இருக்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்தான். எப்படின்னா, அவர் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டார். ஆனா கிறிஸ்மஸ்க்கு வாழ்த்துச் சொல்றாரு. நாங்களும் கிறிஸ்மஸ்க்கு வாழ்த்துச் சொல்றோம். நாங்க இஸ்லாமியப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லுவோம். ஈத் முபாரக் சொல்லுவோம். ஆனா அவர் சொல்ல மாட்டார். அப்ப எது மதச்சார்பு, எது மதச்சார்பு இல்லை? விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டார். நாங்க சர்ச்சுக்குப் போறோம், பள்ளிக்கு போறோம். பிரைம் மினிஸ்டரே எல்லா சர்ச்சுக்கும் போறாரு, டெல்லி இமாமைக் கட்டித் தழுவுறாரு. போப்பாண்டவரைப் போய்க் கட்டித் தழுவக்கூடிய சக்தி மிகுந்த தலைவர் நரேந்திர மோடி அவர்கள்.

மாநில அரசியலில் திருமா, கனிமொழி

கேள்வி: திருமாவளவன் மாநில அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார், காட்டுமன்னார்கோயில்ல போட்டியிடுவதற்கான முடிவு செஞ்சிருக்காரு. அவருடைய முடிவை எப்படிப் பார்க்குறீங்க?

நயினார் நாகேந்திரன்: அவர் ஏற்கனவே அதிருப்தியா இருக்கிற மாதிரி ஒரு செய்தி வந்திருக்கு. ஆனா அவர் சொல்லும்போதே இனிமேல் தேர்தல்ல போட்டியிடணுமா அப்படிங்கிற மாதிரிலாம் செய்தியைப் பார்த்தேன். அவருடைய மனசுக்குள்ள இருக்கக்கூடிய வருத்தத்தை இது வெளிப்படுத்துது.

கேள்வி: விஜய் பிரச்சாரத்திற்குப் போற இடங்கள்ல போலீஸ் பாதுகாப்பு முறையா கிடைக்கல அப்படிங்கிறது நேத்து அவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.

நயினார் நாகேந்திரன்: இன்னைக்கு திமுக அரசு, திமுகவைத் தவிர வேற எந்தக் கட்சிக்கும் பாதுகாப்பு கொடுப்பதில்லை. அவங்க நடத்துற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்குறாங்க. மற்ற கட்சிகள் எந்தக் கட்சியா இருந்தாலும் அனுமதி வாங்குவதற்கு நீதிமன்றம் போய்தான் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

கேள்வி: கனிமொழி மாநில அரசியலுக்கு வரணும்னு விருப்பப்பட்டதா பேசப்படுது. இது குறித்த உங்களுடைய கருத்து என்ன?

நயினார் நாகேந்திரன்: அவங்க குடும்பப் பிரச்சினையை நம்ம சொல்லலாமா? அது அவங்களுடைய கட்சிப் பிரச்சினை, அவங்களுடைய குடும்பப் பிரச்சினையைப் பத்தி கருத்துச் சொல்வது நாகரிகமானது இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

அண்ணாமலையின் பெயர் இல்லை..

இந்த பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறும் போது, கோவை விமான நிஒலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் பெயர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்தது என்கிறார். ஆனால் நமது மின்னம்பலத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை என்பதற்கான ஆதாரத்தையும் பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share