ரஜத் கத்தூரியா
ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவிருந்த அமெரிக்காவுடனான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிகள் மீதான 25% வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தியா மீது மேலும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் மிக அதிக வரிவிதிக்கப்பட்ட வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும்.

உள்நாட்டு அரசியல் குறிக்கோள்களையும் புவிசார் மூலோபாய இலக்குகளையும் அடைய நாடுகள் வர்த்தகக் கொள்கையைப் பயன்படுத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால், நாடுகளுக்கிடையில் வணிக மட்டத்தில் நிகழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் (WTO) செயல்பாடுகளை 2019 டிசம்பர் முதல் அமெரிக்க அரசாங்கம் முடக்கியுள்ளது.
இதனால், பலம் பொருந்திய நாடுகள் எந்தப் பொறுப்புமின்றி தங்கள் விருப்பங்களைத் திணிக்க முடிகிறது. இத்தகைய அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், உலக வர்த்தகத்தில் அதிரடி ஆதிக்கப்ப் போக்கைத் தடுக்கவுமே இந்தியா போன்ற நாடுகள் பலதரப்பு வர்த்தக அமைப்பை ஆதரிக்கின்றன.
வளர்ந்து வரும் அதீத தேசியவாதமும் வளரும் நாடுகளுக்குச் சலுகை அளிக்காமல் சமமான பலன்களை எதிர்பார்க்கும் சக்திவாய்ந்த நாடுகளின் மனப்பான்மையும் இந்தச் சூழலுக்கு ஒரு காரணம். இருப்பினும், ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் $90,000 ஆகவும், மற்றொரு நாட்டின் தனிநபர் வருமானம் $1,000 ஆகவும் இருக்கும்போது, அங்கு சமமான பலன் என்பது எப்படிச் சாத்தியமாகும்?
அமெரிக்காவின் கோரிக்கைகளும் இந்தியாவின் வழிமுறைகளும்
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரிக்கு உடனடித் தூண்டுதலாக இருந்தாலும், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா விதிக்கும் ‘அதிகப்படியான வரி’ போன்ற பிற காரணங்களையும் அமெரிக்கா கூறுகிறது. விவசாயம், பால் போன்ற துறைகளில் வெளிநாடுகளை அனுமதிக்க இந்தியா தயங்குவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இது அமெரிக்காவின் விவசாயிகளையும் வணிகங்களையும் பாதிக்கிறது என்று வாதிடுகிறது.

அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அது இந்தியாவின் விவசாயத்திற்கும் பால்வளத் துறைக்கும் அச்சுறுத்தலாக அமையும். இத்துறைகள், இந்தியாவின் வேலைவாய்ப்புகளில் சுமார் 45% பங்களிக்கின்றன. 80 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளன.
அமெரிக்க விவசாயப் பொருட்களை அனுமதிப்பது இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், அரசு ஏற்கெனவே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கடும் எதிர்ப்பின் காரணமாக ஏற்கெனவே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்தச் சூழலில், விவசாயத் துறையின் ஒரே ஒரு பகுதி வெளிநாடுகளுக்குத் திறக்கப்படுவதுகூட விவசாயிகளுக்கு எதிரானதாகக் கருதப்படலாம். இந்த காரணத்திற்காக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடனான சமீபத்திய தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கையைத் தொடர்கிறது. இதற்கிடையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவுகளை அமெரிக்கா பலவீனப்படுத்தவும், இந்தியாவை அதன் புவிசார் அரசியல் நோக்கங்களுடன் இணைக்கவும் முயல்கிறது.
புதிய வரி விதிப்புகள் பல இந்திய ஏற்றுமதித் துறைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளி, ஆடை, ரத்தினங்கள், ஆபரணங்கள், கடல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் மற்றும் கம்பளங்கள் போன்ற தொழில்கள் 50% க்கும் அதிகமான ஏற்றுமதி வீழ்ச்சியைக் காணலாம். அவற்றின் குறைந்த லாப வரம்புகள், இந்த அதிக வரிகளைத் தாங்க முடியாததால், வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற போட்டியாளர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

உதாரணமாக, அலுமினியம் மற்றும் இரும்பு, எஃகு ஏற்றுமதிகள் முறையே 58% மற்றும் 40% சரிந்துள்ளன. இந்தியாவின் வாகன பாகங்கள் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 50%, இந்த புதிய வரி விதிப்புகளால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 0.1% முதல் 0.6% வரை குறையக்கூடும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman Sachs) திட்டமிட்டுள்ளது.
என்ன செய்யலாம்?
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புகளை “நியாயமற்றவை, காரணம் இல்லாதவை” என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பொருளாதார ஆக்கிரமிப்பிலிருந்து தனது மக்களின் எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று வாதிடுகிறது. அமெரிக்காவுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது, ஐரோப்பிய ஒன்றியம், லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளை நோக்குவது மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவது போன்ற வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்துவருகிறது.
சமீபத்திய அமெரிக்க வர்த்தகக் கொள்கை, வலிமையான அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி அதன் வெளியுறவுக் கொள்கை இலக்குகளைத் திணிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு, இந்தியாவின் பொருளாதார அபிலாஷைகளுக்கு நிலையற்ற சவாலை முன்வைக்கிறது. அதிக வரிகள், இந்தியாவின் சீனா பிளஸ் ஒன் உத்தியை ஈர்ப்பதற்கான அதன் இலக்குக்கு முரணானது.
இந்தியா, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஏற்றுமதிச் சந்தைகள் மிக அவசியமானவை என்ற பாடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் போன்ற மூலோபாய ஒப்பந்தங்கள் மூலம் புதிய தேவையை உருவாக்க வேண்டும்.

கோலியாத் (அமெரிக்கா) ஆதிக்கம் செலுத்தும் இந்த ஆயுதமயமாக்கப்பட்ட வர்த்தக யுகத்தில், இந்தியா புத்திசாலித்தனமான மூலோபாய நடவடிக்கைகள் மூலம் தனது சொந்த “டேவிட் தருணத்தை” உருவாக்க பாடுபட வேண்டும். தொழிலாளர், வரிவிதிப்பு மற்றும் தொழில் செய்வதற்கான எளிமை போன்ற உள்நாட்டு கட்டமைப்பு சீர்திருத்தங்கள், இந்தியாவின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் மிக முக்கியமானவை. இவை உலகளாவிய புதிய ஒழுங்குக்கு அவசியமான தீர்வை வழங்கக்கூடும்.
ரஜத் கத்தூரியா, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் மானுட அறிவியல், சமூக அறிவியல், பொருளாதாரம் ஆகிவற்றில் பேராசிரியராக இருக்கிறார்.