மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராஜுயிட்டி (Gratuity) தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களுக்கு கிராஜுயிட்டி வரம்பு எப்போது பொருந்தும், எப்போது பொருந்தாது என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, ராணுவ சேவைக்குப் பிறகு சிவில் பணிக்கு வருபவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாகும்.
புதிய CCS (Payment of Gratuity under NPS) Amendment Rules, 2025 இன் விதி 4A இன் படி, ஒரு அரசு ஊழியர் மத்திய அரசுப் பணி மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்பில் (Autonomous Body) என இரண்டிலும் பணியாற்றி இரண்டிலிருந்தும் தனித்தனியாக கிராஜுயிட்டி பெற்றால், மொத்த கிராஜுயிட்டிக்கு ஒரு வரம்பு விதிக்கப்படும்.
இரண்டு முக்கிய நிபந்தனைகள்:
- மறுவேலைவாய்ப்பு (Re-employment):
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு (பணி ஓய்வு, கட்டாய ஓய்வு அல்லது கருணை அடிப்படையில்) மீண்டும் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டால் அந்த மறுவேலைவாய்ப்புக் காலத்திற்கு அவருக்குத் தனி கிராஜுயிட்டி கிடைக்காது. அமைச்சகத்தின் அறிவிப்பு இதைத் தெளிவாகக் கூறுகிறது: “மத்திய சிவில் சேவைகள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிராஜுயிட்டி செலுத்துதல்) திருத்த விதிகள், 2025 இன் விதி 4A இன் படி, பணி ஓய்வு கிராஜுயிட்டி அல்லது ஓய்வு பெறும் கிராஜுயிட்டி அல்லது கட்டாய ஓய்வு கிராஜுயிட்டி பெற்று ஓய்வு பெற்ற அல்லது பணிநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்பட்டதால் கருணை கிராஜுயிட்டி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரசு ஊழியர், பின்னர் மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டால் அவரது மறுவேலைவாய்ப்புக் காலத்திற்குத் தனி கிராஜுயிட்டிக்கு அவர் தகுதியுடையவராக இருக்க மாட்டார்.”
- PSU/தன்னாட்சி அமைப்பிலிருந்து அரசுப் பணிக்கு மாறும்போது:
ஒரு ஊழியர் முன்பு ஒரு PSU அல்லது தன்னாட்சி அமைப்பில் பணியாற்றி, அங்கிருந்து உரிய அனுமதி பெற்று மத்திய அரசுப் பணிக்குச் சேர்ந்தால் அவர் அரசுப் பணிக்கான கிராஜுயிட்டியையும் பெறுவார். முன்பு PSU/தன்னாட்சி அமைப்பிலிருந்து பெற்ற கிராஜுயிட்டியும் அப்படியே இருக்கும். ஆனால், இரண்டு மூலங்களிலிருந்தும் பெறும் மொத்த கிராஜுயிட்டி, அவரது மொத்த சேவைக்காலத்திற்கும் (PSU + அரசுப் பணி) மற்றும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது இருந்த சம்பளத்திற்கும் ஏற்ப கணக்கிடப்படும் கிராஜுயிட்டித் தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது.
மாநில அரசு மற்றும் மத்திய அரசுப் பணி:
மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாறி ரண்டிலிருந்தும் தனித்தனியாக கிராஜுயிட்டி பெற்றால் மொத்த கிராஜுயிட்டிக்கு ஒரு வரம்பு விதிக்கப்படும். இந்த வரம்ப அவர் மத்திய அரசுப் பணியில் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி, அதே இறுதிச் சம்பளத்தில் ஓய்வு பெற்றிருந்தால் பெற்றிருக்கக்கூடிய கிராஜுயிட்டித் தொகையை விட அதிகமாக இருக்காது.
ராணுவ சேவைக்குப் பிறகு சிவில் பணி:
ராணுவ சேவைக்குப் பிறகு சிவில் பணியில் மீண்டும் நியமிக்கப்பட்டு ராணுவ சேவைக்கான கிராஜுயிட்டியையும் ஏற்கனவே பெற்றிருந்தால், சிவில் பணிக்கான கிராஜுயிட்டிக்கு (NPS/CCS விதிகளின் கீழ்) ராணுவ கிராஜுயிட்டியால் எந்த வரம்பும் விதிக்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, சிவில் பணிக்கான கிராஜுயிட்டி, ராணுவ சேவை கிராஜுயிட்டியின் அடிப்படையில் குறைக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
