’16 குற்றச்சாட்டுகளுக்கு’ பதிலளிக்க ராமதாஸ் மீண்டும் கால அவகாசம் வழங்கியிருக்கும் நிலையில், நாளை மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளார் அன்புமணி.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மகள்கள் ஸ்ரீகாந்தி, கவிதா மற்றும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தந்தையையும், மகனையும் சேர்த்து வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று (செப்டம்பர் 3) தைலாபுரத்தில் நிர்வாகிகள் குழு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ். இதில் 39 பேர் கலந்துகொண்டனர். ராமதாஸ் மகளும், பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீகாந்தியும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், 16 குற்றசாட்டுகளை முன்வைத்து அனுப்பப்பட்ட நோட்ஸுக்கு, ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்தும் பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ராமதாஸ் ஆலோசித்தார்.
தொடர்ந்து அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்தார்.
இதற்கு மகள் ஸ்ரீகாந்தி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்காமல், 16 குற்றச்சாட்டுகளுக்கு செப்டம்பர் 10ம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க மீண்டும் கால அவகாசம் வழங்கினார். இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இந்தசூழலில் தேர்தல் ஆணையம் பாமக அலுவலகம் என அங்கீகரித்த பனையூர் அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 5) காலை மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மாலை மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தவுள்ளார். “இந்த கூட்டத்தில் அன்புமணி, ’நான் தான் பாமக தலைவர். தேர்தல் ஆணையம் 2026 ஜூன் வரை கட்சியின் தலைவர் நான் தான் என்று அங்கீகரித்துள்ளது. இதில் தேவையில்லாத குழப்பம் வேண்டாம் என்று பேசவுள்ளார்.
கட்சியை வளர்ப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்குவார்” என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.
இந்தசூழலில் 16 கேள்விகளுக்கு மவுனம் சாதித்து வரும் அன்புமணி, நிறுவனர் ராமதாஸுக்கு பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.