வேறு மொழிகளில் பெரிதாகக் கவனம் பெறாத நாயகிகள் தமிழில் சட்டென்று புகழேணியில் ஏறுவதுண்டு. அம்பிகா, ராதா, ஊர்வசி காலத்திற்கு முன் தொடங்கி நயன்தாரா, அமலா பால் காலத்திற்குப் பின்னும் அது தொடர்கிறது. இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கிய சிம்ரன் போன்று ஏராளமான உதாரணங்களை இந்த வரிசையில் அடுக்கலாம். அதில் இணையத்தான் பல நடிகைகள் முண்டியடிக்கின்றனர். அதிலொருவராக இணைவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அனஸ்வரா ராஜன்.
’வியாசனசமேதம் பந்துமித்ராதிகள்’, ‘பைங்கிளி’, ‘ரேகாசித்ரம்’, குருவாயூர் அம்பலநடையில்’, ‘நெரு’ என்று அவர் நடித்த பல மலையாளப் படங்கள் வித்தியாசமான அனுபவத்தைத் தருபவை. அவர் அறிமுகமான ‘உதாரணம் சுஜாதா’ தொடங்கி ‘தண்ணீர் மாதன் தினங்கள்’, ‘ஆத்யராத்ரி’, ‘சூப்பர் சரண்யா’ என்று அவர் பதின்ம வயதுப் பெண்ணாகத் தோன்றிய படங்கள் அங்குள்ள ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவை.
அதே காலகட்டத்தில் ‘ராங்கி’ என்ற தமிழ் படத்தில் த்ரிஷாவின் தங்கையாகத் தோன்றியிருக்கிறார் அனஸ்வரா. நெடுநாட்கள் முடங்கிக் கிடந்த அப்படம் 2022இல் வெளியாகி நற்பெயரைப் பெற்றது. பிறகு, பிருந்தா இயக்கிய ‘தக்ஸ்’ படத்திலும் நடித்தார்.
இப்போது செல்வராகவனின் இயக்கத்தில் ‘7 ஜி ரெயின்போகாலனி 2’விலும் நடித்து வருகிறார்.

ஆனாலும், அனஸ்வரா ராஜனின் அலை தமிழிலும் வீசுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அவர் நடிக்கிற புதிய படத்தின் அறிவிப்பு. சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிற இப்படத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது பாத்திரப் பெயர் ’சத்யா’. அனஸ்வரா நடிக்கிற பாத்திரத்தின் பெயர் ’மோனிஷா’.
ஒரு புத்தம்புதிய காதல் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற இப்படத்தினை மதன் இயக்குகிறார். இவர் ‘டூரிஸ்ட் பேமிலி’யில் இணை இயக்குனராக இருந்தவர்.
இப்போது தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு ரொமான்ஸ், காமெடி, ட்ராமா, ஆக்ஷன் எல்லாமே ‘லேசான’ அளவில் இருந்தால் போதும்; அவற்றை ஒன்றாகக் குழைத்து ‘கனமான’ படமாக தருவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
அந்த வகையில் ஒரு சிறப்பான படமாகவும், அனஸ்வராவுக்கு தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்குகிற படைப்பாகவும் இது இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது. ஏற்கனவே இங்கு கால் பதித்துள்ள மமிதா பைஜு, கயாடு லோஹருக்கு இடையிலான போட்டிக்கு நடுவே இவர் என்னவாகப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.