அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பை இன்று (செப்டம்பர் 13) மாலை 4.46-க்கு வெளியிடப் போவதாக தனது சமூக வலைதளத்தில் ட்விட் செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு கிடைத்து வரும் மக்களின் பெரும் ஆதரவு, அதிமுக ஒன்றிணைய கோரி கொடி பிடிக்கும் செங்கோட்டையன், பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் என ஒவ்வொரு நாளிலும் தமிழக அரசியலில் அனல் பறந்து வருகிறது.
இதற்கிடையே எதையும் வித்தியாசமாக செய்ய துடிக்கும் நடிகர் பார்த்திபன் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள ட்விட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதில் அவர், ”Friends.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!!” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் பிரச்சார பயணத்தால் காலையில் இருந்து திருச்சியே ஸ்தம்பித்துள்ள நிலையில், பார்த்திபனின் இந்த அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தனது படம் விவகாரம் தொடர்பான அறிவிப்பையே இவ்வாறு வித்தியாசமாக பதிவிட்டிருக்கலாம் என அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.