அமெரிக்கா இந்தியாவிற்கு 25% வரி விதித்துள்ள நிலையில் ஒரு விதத்தில் இது இந்தியாவிற்கு சாதகம் தான் என இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 25% வரி விதித்துள்ளதாக நேற்று (ஜூலை 30) அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
வல்லரசு நாடான ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இராணுவ உபகரணங்களையும் எரிவாயுவையும் இந்தியா வாங்குகிறது. மேலும் ரஷ்யா மீது வர்த்தக தடை அதிகம் உள்ள போதும் இந்தியா தனது வர்த்தகத்தை தொடர்ந்து வருகிறது. ஆகவே தண்டனை என்ற வகையில் தற்போது இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்திய வணிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வரி விதிப்பின் அழுத்தம் ஆட்டோ மொபைல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் வர்த்தக பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடியாததால், தற்போது இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி தற்காலிக விதிக்கப்பட்டுள்ளது. 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 25 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதேசமயம் இந்த வரி விதிப்பு இந்தியாவிற்கு மட்டும் விதிக்கப்படவில்லை. நமது போட்டி நாடுகளான வங்கதேசத்திற்கு 35 சதவீத வரியும், கம்போடியாவிற்கு 36 சதவீத வரியும், சீனாவிற்கு 50 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளை விட இந்தியாவிற்கு குறைவாக தான் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வித்தியாசம் ஒரு விதத்தில் இந்தியாவிற்கு சாதகம் தான். அதனால் அமெரிக்க சந்தையில் இந்திய வியாபாரம் குறைய வாய்ப்பில்லை.
இந்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தையில், 5 சதவீத வரி குறைக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு கூடுதல் சாதகமாக அமையும்.
நமது போட்டி நாடான வியட்நாமிற்கு 20 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வியட்நாம் ஜவுளி உற்பத்தி பொருட்கள் வேறு, இந்திய ஜவுளி உற்பத்தி பொருட்கள் வேறு. நாம் பருத்தி சார்ந்த ஆடைகளை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். வியட்நாம் பாலிஸ்ட் சார்ந்த ஆடைகளை அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். அதனால் இந்திய பருத்தி உற்பத்தி பொருட்களுக்கு எதிர்பார்த்த அளவு வியாபாரம் வளரவில்லை என்றாலும், வியாபாரம் குறைய வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.