பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 28) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்? குற்றத்திற்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது என்றால் பிறகு எப்படி நியாயம் வரும்? யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்து பேசியது ஏன்? ரூ.20 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் உண்மை எப்படி வெளியே வரும்? சிபிஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
மேலும் கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா, விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். மாநில அரசு விசாரணை நடத்திய போது முன் ஜாமின் கேட்ட ஆனந்த் சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெறுகிறார் எனில் சிபிஐ காப்பாற்றதானே செய்கிறது?கரூர் சம்பவத்தில் எப்ஐஆரில் விஜய் பெயர் சேர்க்கப்படாதது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
