தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அறிவுத் திருவிழா (Arivu Thiruvizha) நடத்தப்பட்டது என திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அறிவுத் திருவிழா இறுதி நாள் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை:
முற்போக்குப் புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்களை மக்கள் பார்வையிட்டு வாங்கி இருக்கின்றனர். கடந்த 9 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்து, ரூ.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகம் 1,500 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. முன்பதிவு திட்டத்தில் 7,000 படிகள் விற்பனையாகின.
வள்ளுவர் கோட்டம் என்றால் ராசி இல்லாத இடம் என்பார்கள். அறிவுத்திருவிழா நடத்த நான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அறிவுத்திருவிழாவிற்கும் ராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைப்பவன் நான்.
தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு, கலைஞர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள தேர்வு செய்த இடம் வள்ளுவர் கோட்டம்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைபோல், ஆண்டுதோறும் வெவ்வேறு மாவட்டங்களில் அறிவுத்திருவிழா நடத்தப்படும்.
அறிவுத்திருவிழா ஏன் என பலர் கேள்வி எழுப்பினார்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்டதுதான் தி.மு.க அறிவுத்திருவிழா. திமுக இளைஞரணியினர் நிறைய படிக்க வேண்டும். அனைவரின் கருத்துகளையும் தெரிந்து கொண்டு, அதற்கு பதிலடி தரும் வகையில் நம் அறிவை வளர்க்கவும், ஆற்றலை பெருக்கவும் வேண்டும்.
நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தொண்டர்கள் அரசியல் தெளிவு பெற்றால் அரசியல் செய்ய முடியாது என நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, அ.தி.மு.க தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது. தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.
அப்படியான கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொள்கையை மட்டும் மறக்கவில்லை. தனது தலைவரையும் மறந்துவிட்டார். சமீபத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு, அண்ணாவிற்கு மரியாதை செலுத்தியிருக்கிறேன் என பேட்டியளிக்கிறார் பழனிசாமி. இதுதான் அ.தி.மு.க.வின் நிலைமை.
நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே S.I.R வேலையில் ஈடுபட்டிருக்கிறது.தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அறிவுத் திருவிழா
திமுக இளைஞரணி சார்பில் திமுகவின் 75–ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8-ந் தேதி தொடங்கி நவம்பர் 16-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த அறிவுத் திருவிழாவை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அறிவுத் திருவிழாவை முன்னிட்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யும் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அறிவுத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், திமுக 75 அறிவுத் திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!
வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.
குறிப்பாக, ‘Carry on, but remember’ எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்.
வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது திமுக இளைஞரணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா! என தெரிவித்துள்ளார்.
