மத்திய பாஜக அரசின் புதிய 100 நாள் வேலை மசோதா எதிர்ப்பு- டிச.24 போராட்டம் ஏன்? ஸ்டாலின் விளக்கம்

Published On:

| By Mathi

CM MK Stalin

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் உண்மையான நோக்கத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்துவிட்டது என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகாத்மா காந்தியடிகள் பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்கு புரியாத இந்திப் பெயரை வைத்திருக்கிறார்கள். மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பா.ஜ.க.வுக்கு பிடிக்காது.

ADVERTISEMENT

காந்தியின் பெயர் நீக்கம்

அதனாலேயே, அதையெல்லாம் வாழ்நாளெல்லாம் வலியுறுத்திய காந்தியையும் அவர்களுக்கு பிடிக்காது! உலகம் முழுவதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கின்ற தேசத்தந்தை காந்தியின் பெயரை இன்றைக்கு நீக்கியிருக்கிறார்கள். காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே காலி செய்துவிட்டார்கள் – அழித்துவிட்டார்கள் – அழிக்கிறார்கள்.

ADVERTISEMENT

நிதியை தராத மத்திய அரசு

கடந்த பத்தாண்டுகளாக இந்தத் திட்டத்தை பல்வேறு கோணங்களில் கெடுத்தார்கள் – பலவகைகளில் நாசப்படுத்துகிறார்கள். ஆட்களைக் குறைத்தார்கள் – வேலை நாட்களைக் குறைத்தார்கள் – சரியாக சம்பளம் தரவில்லை – சரியாக அங்கிருந்து முறையாக வரக்கூடிய நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியைகூட, மாநில அரசான நாம்தான் அந்த நிதியை சமாளித்து வழங்கினோம்.

ADVERTISEMENT

மூடுவிழா நடத்தும் மத்திய அரசு

இப்படி சிறிது, சிறிதாக நாசம் செய்த அந்த திட்டத்திற்கு, இப்போது மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார்கள்! இனிமேல், மாநில அரசு 40 விழுக்காடு நிதி தர வேண்டுமாம். ஏற்கனவே, நிதி நெருக்கடியை உருவாக்கி, நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்து, நம்மை முடக்கப் பார்ப்பவர்கள், இப்போது கூடுதல் சுமையை நம்முடைய தலையில் கட்டுகிறார்கள்!

விவசாயிகளை கை கழுவிய மத்திய அரசு

அறுவடைக் காலங்களில், 60 நாட்கள் வேலை எதுவும் வழங்கப்படாது என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனால், வேளாண் பணி செய்தவர்கள் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறார்கள். மொத்தத்தில், ஏழைகளுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி இருக்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் வரலாற்று தவறு

நாடாளுமன்றத்திலும் இதைப் பற்றி முறையாக விவாதிக்காமல் அக்கிரமம் செய்து, நிறுத்திவிட்டார்கள். இதன் விளைவுகள் இதை யாரும் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு மோசமாக இருக்கிறது. அதனால்தான், அரசியல் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள் – உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்கள் – நோபல் பரிசு பெற்ற வல்லுநர்கள் என்று பலரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முடிவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். “இது ஒரு வரலாற்றுத் தவறு” என்று எச்சரிக்கை மணிகளை ஒலித்திருக்கிறார்கள்.

டிச.24-ல் திமுக கூட்டணி போராட்டம்

இந்த நிலையில்தான், வருகின்ற 24-ஆம் தேதி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசிற்கு எதிராக நாம் ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் அறிவித்திருக்கிறோம்.

போலி விவசாயி பழனிசாமி

ஆனால், இதைப் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருக்கிறார் யார்? போலி விவசாயி பழனிசாமி. உண்மையான விவசாயியாம். நான் தான் விவசாயி, நான் தான் விவசாயி என்று சொல்கிறார். நானும் கேடி தான், நானும் திருடன் தான் என்று சொல்வது போல், நானும் விவசாயி தான், நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை.

அதிமுகவின் துரோகங்கள்

ஏற்கனவே, விவசாயிகளின் உரிமையை பறிக்க, அவர்களையெல்லாம் நடுத்தெருவில் நிறுத்தி, பெரிய போராட்டத்தையே நடத்தினார்கள். எதற்கு? அப்போது மூன்று வேளாண் சட்டத்தை பா.ஜ.க. கொண்டு வந்தது. அதற்கு, பா.ஜ.க. காரர்களே, மூக்கு மீது விரல் வைப்பதுபோல் முட்டு கொடுத்தார், யார்? பழனிசாமி! என்ன சொன்னார்? நியாயப்படுத்தினார். போராடுபவர்களை எல்லாம் புரோக்கர் என்று சொன்னார்.

அதுமட்டுமா? சிறுபான்மையினருக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்த சட்டத்தை பா.ஜ.க. கொண்டு வந்தபோது, நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால், இதனால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டவர் யார் பழனிசாமி!

இந்த துரோக List-இல் latest, கூடுதலாக, நூறுநாள் வேலைத் திட்டமும் சேர்ந்திருக்கிறது! பா.ஜ.க. அரசு பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கின்றபோது கூட, அதை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணைபோகும் இந்த செயலை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்! எனவேதான், மக்கள் சக்தியின் துணையோடு இந்த சட்டத்தையும் திரும்ப பெற வைப்போம்! இது எங்களுடைய இலட்சியம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share