பீகாரில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி (Congress) தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வெறும் 6 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவை எதிர்கக்ட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் முழுவதும் யாத்திரை, பிரசாரம் என ‘வம்பாடு’ பட்டும் விழலுக்கு பாய்ந்த நீரைப் போல பயனற்றுப் போய்விட்டது.

பீகாரில் ஏன் காங்கிரஸ் கட்சி ‘காலாவதி’யாகிப் போனது?
- பீகாரில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு பூத் முகவர்களைக் கூட போட இயலாத அளவுக்கு ‘தொண்டர்கள்’ கூட இல்லாத பரிதாப நிலை மிக அடிப்படை காரணம் என்கின்றனர் அந்த கட்சியின் தலைவர்கள்.
- காங்கிரஸ் கட்சியின் பீகார் முகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தலைவர்கள் யாருமே இல்லை. 1990களின் தொடக்கம் முதலே பீகார் மாநிலத்துக்கான காங்கிரஸ் முகமே இல்லை.
- பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி ‘விழுந்து விழுந்து’ பிரசாரம் செய்தாலும், ‘அய்யா உங்க ஓட்டு பறிபோகுது’ன்னு கூப்பாடு போட்டிருந்தாலும் அவரது பேச்சும் பிரசாரமும் மக்களால் ஏற்கப்படவில்லை; நிராகரிக்கப்பட்டிருக்கிறது. பீகார் தேர்தல் களத்தில் ராகுல் காந்தி இடைவிடாமல் பிரசாரம் செய்திருக்க வேண்டும்; ஒட்டுமொத்த காங்கிரஸ் ‘தலைவர்கள்’, ‘தளபதிகள்’ பீகார் தேர்தலுக்கு படையெடுத்திருந்தால், ‘ஆஹா’ காங்கிரஸ் கட்சியும் நம் மீது கரிசனமாகத்தான் இருக்கிறது என்கிற குறைந்தபட்சம் தாக்கம் இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அப்படிப்பட்ட ஒரு வியூகத்தைக் கூட செயல்படுத்தவில்லை
- பீகாரில் இப்படி தலைவர்களும் இல்லை.. தொண்டர்களும் இல்லை என்ற காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளுக்கு மட்டும்தான் குறைவு இல்லை என்ற கதையாக 61 இடங்களை வம்படியாக கேட்டு வாங்கியது. 2020 சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19-ல் தான் வென்றது. அந்த தேர்தலில் இருந்து பாடம் கற்காமல், ‘பெரிய கட்சி’ ‘அதிக சீட் வேண்டும்’ என்கிற போக்கு, காங்கிரஸை மட்டுமல்ல கூட பயணித்த ஆர்ஜேடியையும் பதம் பார்த்துவிட்டது.
- பீகாரில் காங்கிரஸ் கட்சியே ஒரு மாநிலக் கட்சியை விட மோசமான நிலையில் இருக்கிறது; ஆனால் பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது உள்ளிட்ட முறைகேடுகளுக்குதான் பஞ்சமில்லை. இப்படி வெளியூர் பிரமுகர்களை வேட்பாளர்களாக பல தொகுதிகளில் நிறுத்தியதால் கொஞ்ச நஞ்சம் இருந்த காங்கிரஸ் தொண்டர்களும் சொந்த கட்சிக்கே ஓட்டுப் போடாமல் போயிருக்கின்றனர். அதுவும் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கே சீட் தந்தை எல்லாம் காங்கிரஸ் கட்சியினரே ஜீரணிக்கவில்லை.
- காங்கிரஸ் கட்சிக்கான பாரம்பரிய வாக்கு வங்கி முஸ்லிம்கள். ஆனால் இம்முறஇ முஸ்லிம்களை காங்கிரஸ் தக்க வைக்க தவறிவிட்டது; முஸ்லிம் மக்களிடம் இருந்து காங்கிரஸ் அன்னியப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விக்கு காரணம், முஸ்லிம் வாக்காளர்கள் கைவிட்டுவிட்டதுதான். ஆனால் ஆர்ஜேடி கட்சியான முஸ்லிம்- யாதவ் வாக்கு வங்கியை தக்க வைத்ததால் கவுரவமான சீட் கிடைத்தது.
- பீகார் மாநிலத்தின் பிரச்சனைகளை விட தேசிய அளவிலான பிரசாரத்துக்கே காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்தது. வாக்கு திருட்டு, SIR போன்றவை எல்லாம் தேசிய அளவிலான பிரச்சனை. இதனை மட்டுமே பீகார் தேர்தலில் ராகுல் காந்தி பேசியது கை கொடுக்கவில்லை; மாறாக ஒவ்வொரு தொகுதிக்கும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து பாஜக செயல்படுத்திய வியூகம்தான் கை கொடுத்திருக்கிறது.
- காங்கிரஸ் கட்சி, பலவீனமான நிலையில் இருந்தாலும் அதன் பாரம்பரிய அடையாளமான உட்கட்சி மோதல் பலமாகவே இருந்ததும் பீகாரில் பாதாளத்தில் அக்கட்சி விழ காரணம்.
- பொதுவாக ஆட்சிக்கு எதிராக இருக்கும் அதிருப்தியை எதிர்க்கட்சிகள் அறுவடை செய்ய வியூகம் வகுக்கும்; ஆனால் பீகாரில் அப்படி எந்த ஒரு வியூகத்தையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை; அது பாஜக கூட்டணிக்கு சாதகமாகிப் போனது.
- பீகாரில் 1990களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியால் எழுந்திருக்கவே முடியவில்லை; அப்படி ஒரு கட்சியின் இருப்பு மாநிலத்துக்கே தேவையா? என்கிற மக்களின் மனநிலைதான் இந்த வீழ்ச்சிக்கு காரணம். இப்போது சாம்பலில் புதைந்து கிடக்கிறது காங்கிரஸ்.. மீண்டு எழக் கூடிய வியூகம் அந்த கட்சியின் தலைமைக்கு இருக்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
