எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’, உலகத்தின் பார்வையை இந்தியத் திரையுலகம் நோக்கித் திருப்பியது என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இடம்பெற்றிருக்க வேண்டுமென்று ராஜமௌலி விரும்பினார் என்பது பலரும் அறியாத தகவல்.
ஆனால், அதற்கான சரியான காரணத்தைக் கூறாமல் பாகுபலி தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்.
’பாகுபலி’யில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி பாத்திரத்திற்காகத்தான் ஸ்ரீதேவியை அணுகியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. கதை எல்லாம் ‘ஓகே’ ஆனபிறகும், சம்பள விஷயத்தில் ஸ்ரீதேவி திருப்தியுறவில்லை. காரணம், அப்படத்தைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ்’ அவருக்குக் குறைவான சம்பளத்தைத் தர முனைந்தது தான் என்றிருக்கிறார் போனி கபூர்.
‘கேம்சேஞ்சர்ஸ்’ எனும் யூடியூப் நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
“அப்போது ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விடக் குறைவான தொகையை தயாரிப்பாளர்கள் கொடுப்பதாகச் சொன்னார்கள். அதற்கு ஸ்ரீதேவி ஒப்புக்கொள்ளவில்லை. அவர் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அவர் மூலமாக இந்தி, தமிழிலும் நல்லதொரு வரவேற்பு நிச்சயம் கிடைத்திருக்கும். அப்படியொரு நிலையில், நான் ஏன் அவரைக் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க வைக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

அதேநேரத்தில், ராஜமௌலியிடம் தயாரிப்பாளர்கள் உண்மையான காரணத்தைக் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார் போனி கபூர்.
“உண்மையான காரணத்தை ராஜமௌலியிடம் அவர்கள் சொல்லவே இல்லை. மாறாக, ‘ஸ்ரீதேவி ரொம்ப அன்புரொபஷனல்’ என்று கூறியிருக்கிறார்கள். அதனை ஏற்கவே முடியாது. அவர் அப்படி இருந்திருந்தால் ராகேஷ் ரோஷன், யாஷ் சோப்ரா, ராகவேந்திர ராவ் போன்றவர்கள் எப்படி மீண்டும் மீண்டும் அவரை வைத்து படங்களை உருவாக்கியிருக்க முடியும்” என்றிருக்கிறார்.
’பாகுபலி எபிக்’ என்ற பெயரில் இரண்டு வெற்றிப் படங்களின் பாகங்களை ஒன்றிணைத்து புத்துருவாக்கம் செய்து வெளியிடும் வேளையில்தான் இப்படியெல்லாம் ‘பழசை’க் கிளற வேண்டுமா?!