2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லை தச்சநல்லூரில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

அதே வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாதது கவனம் பெற்றது.
இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, “டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பணி காரணமாக தன்னால் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை” என அவர் தெரிவித்திருக்கிறாராம். ஆனால் உண்மையில் வேறு காரணம் உள்ளது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களை அமித் ஷா முன்னிலையில் இணைப்பதாக அவர் ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் எவ்வளவு முயற்சித்தும் அதை நிறைவேற்ற முடியவில்லை.

நேற்றைய மாநாட்டின் போது திமுக பிரமுகரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் மட்டுமே அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரும் கூட மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர் தான். அதோடு கடந்த 2022ஆம் ஆண்டு திமுக கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது முதல் அரசியல் நிகழ்வுகளில் ஒதுங்கியே இருந்து வந்தார்.
எனவே பத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை இணைப்பதாக அமித் ஷாவிடம் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையே என்றுதான் நேற்று நடந்த மாநாட்டில் எல்.முருகன் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர்.
நயினார் வேண்டுகோளுக்கு அமித் ஷாவின் விரக்தி பதில்!
இதுதவிர மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன், ”நெல்லையில் நடைபெறும் இந்த முதல் மாநாடு போன்று தமிழகத்தின் 7 பகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் தலைநகர் சென்னையில் நடக்கும் கடைசி மாநாட்டை சுமார் 8 லட்சம் பேர் கூடும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். அதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும்” என மேடையிலேயே வேண்டுகோள் வைத்தார்.
அதன்பின்னர் தனது இல்லத்தில் அளித்த தேநீர் விருந்திலும் இதே கோரிக்கையை அமித் ஷாவிடம் முன் வைத்திருக்கிறார் நயினார்.
அதற்கு, ’முதலில் நீங்கள் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்துங்க.. அதன்பின்னர் நான் வருவது குறித்து பார்க்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார் அமித் ஷா.

இப்படி விரக்தியுடன் அவர் பதில் அளித்ததற்கு நெல்லை பூத் கமிட்டி மாநாடு கூட்டம் தான் காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுதொடர்பாக நேற்றே நமது மின்னம்பலம்.காம் தளத்தில் ’பாஜகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு… அமித் ஷா அப்செட்?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மாநாட்டிற்கு மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சுமார் ஒன்னேகால் லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அமித்ஷா எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் மாநாட்டில்17 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றதும், அதிலும் பலர் 60 வயதுக்கும் மேலானவர்கள் என்பதும் அவரை அப்செட் ஆக்கியுள்ளது. அதனால் தான் நயினாரிடம் சென்னை மாநாடு குறித்து சற்று விரக்தியுடன் பதிலளித்துள்ளாராம் அமித் ஷா.