இரண்டாவது டெஸ்டுக்கான இந்திய பிளெயிங் 11 அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. why kuldeep yadav not in INDvsENG 2nd test? – gill
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூலை 2) தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 1 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனால் ஏகப்பட்ட விமர்சனங்கள் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சுப்மன் கில் மீது குவிந்தன. இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவன் அணியை அறிவிப்பதில் குழப்பம் நிலவியது.
ஏற்கெனவே 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக யார் என்றும், டெஸ்ட் அறிமுக போட்டியில் சொதப்பிய சாய் சுதர்சனுக்கு பதிலாக யார் களமிறக்கப்படுவார் எனவும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பேட்ஸ்மேன்களில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்ச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து விச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் சேக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பிளெயிங் லெவனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இல்லை.
இந்திய அணி விவரம்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இதுதொடர்பாக போட்டிக்கு முன்பு கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “பும்ராவுக்கு அதிக ஓய்வு கொடுப்பது எங்களுக்கு முக்கியமானது. இது அவர் மீதான பணிச்சுமையை குறைக்க உதவும்” என்று நினைக்கிறேன்” என்றார்.
மேலும், “பேட்டிங் பிரிவில் அதிக ஆழத்தை விரும்புவதாகவும், எனவே பேட்டிங்கில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் சுந்தர், குல்தீப்பை விட இரண்டாவது சுழற்பந்து வீச்சு விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கில் கூறினார்.
“நாங்கள் குல்தீப் யாதவ் விளையாட மிகவும் ஆசைப்பட்டோம், ஆனால் கடந்த போட்டியைப் பார்க்கும்போது, பேட்டிங்கில் கொஞ்சம் ஆழத்தை சேர்க்க விரும்பினோம். அதனால் அவரை விட ஆல்ரவுண்டரான சுந்தரை அணியில் இணைத்துள்ளோம்” என்று கில் கூறினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் கீழ் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அது அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது இரண்டு புதிய ஆல்ரவுண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த அணி போட்டியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பர்மிங்காமில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தற்போது, 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்துள்ளது.
களத்தில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 75 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.