தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நடந்து முடிந்த ரூ.738 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “இலங்கை கடற்படை தாக்குதல் தமிழக மீனவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதை கண்டித்து தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் ஒன்றிய பாஜக அரசு நமது மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.
கச்சத்தீவை மீட்பது தான் சரியான தீர்வு என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம். இதை வைத்து ஒன்றிய பாஜக அரசு இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவும் பாஜக அரசு மறுத்து வருகிறது.
இலங்கை சென்ற இந்திய பிரதமரும் இதை வலியுறுத்த மறுக்கிறார். கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. தமிழக மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக ஆகிவிட்டது. தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது.
தமிழ்நாடு மேல் அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜிஎஸ்டியால் நிதி உரிமை பறிபோனது. நிதி பகிர்விலும் ஓரவஞ்சனை காட்டப்படுகிறது. சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. பள்ளிக்கல்விக்கான நிதியையும் தர மறுக்கின்றனர். பிரதமர் பெயரில் இருக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும். இதுவெல்லாம் போதாது என்று நீட், தேசிய கல்விக் கொள்கை என வளர்ச்சிக்கும் தடை விதிக்கப்படுகிறது. கீழடி அறிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக தொகுதி மறு வரையறை என தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே ஒன்றிய பாஜக அரசு வழக்கமாக செய்து வருகிறது” குற்றம்சாட்டினார்.