துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நக்சல் – மாவோயிஸ்டுகளின்’ ஆதரவாளர் என விமர்சித்துள்ளார். இதற்கு, தாம் ‘நக்சல் ஆதரவாளர் இல்லை’ என பதிலடி தந்துள்ளார் சுதர்சன் ரெட்டி.
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜூடும் (Salwa Judum) அமைப்பை தடை செய்து தீர்ப்பு வழங்கியவர்; அப்படி ஒரு தீர்ப்பை சுதர்சன் ரெட்டி வழங்காமல் இருந்திருந்தால் நாட்டில் நக்சலைட்டுகளின் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் என்றார்.
ஆனால் சுதர்சன் ரெட்டி, சல்வா ஜூடும் அமைப்புக்கு எதிரான தீர்ப்பு என்னுடைய தனிப்பட்ட தீர்ப்பு அல்ல.. அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என விளக்கம் அளித்திருந்தார்.
சல்வா ஜூடும் என்பது என்ன?
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் 2005-ம் ஆண்டு மே மாதம், போலீசாரின் முகாமில் இருந்த ரேஷன் பொருட்களை கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். அப்போது, பழங்குடிகளில் ஒரு பிரிவினர், போலீசார் முகாம்களில் இருந்த ரேஷன் பொருட்களை கைப்பற்றிய மாவோயிஸ்டுகளில் ஒருவரை பிடித்து ஒப்படைத்தனர். இங்கிருந்து சல்வா ஜூடுமின் பயணம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிரான இயக்கமாக சல்வா ஜூடும் உருவெடுத்தது.
இந்த இயக்கத்துக்கு அப்போது சத்தீஸ்கர் அரசு ஆதரவு அளித்தது. மூத்த காங்கிரஸ் தலைவரான மகேந்திர கர்மாதான், இந்த இயக்கத்துக்கு சல்வா ஜூடும் எனவும் பெயரிட்டார்.
சத்தீஸ்கரில் பஸ்தார் பிராந்தியம்தான் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்தது. சல்வா ஜூடும் தலையெடுத்த பின்னர் இந்த கோட்டை இரண்டாக பிளவுபட்டது. பழங்குடிகளில் ஒரு பிரிவினர் மாவோயிஸ்டுகளுடனும் மற்றொரு பிரிவினர் அரசு, அரசியல் கட்சிகள் ஆதரவு பெற்ற சல்வா ஜூடும் இயக்கத்துடனும் இணைந்து நின்றனர்.
சல்வா ஜூடும் காலத்தில் பாய்ந்தோடிய ரத்த வெள்ளம்
சல்வா ஜூடும் இயக்கத்துக்கு அரசு ஆதரவு இருந்ததால் விஸ்வரூபம் பெற்று மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 2010-ம் ஆண்டு சல்வா ஜூடும் என பெயர் வைத்த மகேந்திர கர்மா உள்ளிட்ட பலரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் vs சல்வா ஜூடும் என மோதல் உச்சம் தொட்ட 2005-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 422 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்; 1019 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; 726 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அரசாங்கத்தின் கூலிப் படையாக சல்வா ஜூடும் செயல்படுவதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. நாட்டின் பல பகுதிகளில் சல்வா ஜூடும் அமைப்பை தடை செய்யக் கோரி போராட்டங்கள் நடந்தன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கும் – தீர்ப்பும்
இதன் ஒரு பகுதியாக 2011-ம் ஆண்டு சல்வா ஜூடுமுக்கு எதிராக Nandini Sundar உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். Nandini Sundar vs State of Chhattisgarh என்ற இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் சல்வா ஜூடும் அமைப்பு தடை செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்தது.
இத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சுதர்சன் ரெட்டிதான், தற்போதைய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர். ஆகையால்தான் அமித்ஷா, சுதர்சன் ரெட்டி அன்று சல்வா ஜூடும் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டு முன்னதாக நாட்டில் மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.