தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் முதன்மையான இடத்தில் உள்ளது கோவை. தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், கல்வி, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் கோவையின் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் உள்ளது. இதன் காரணமாக அண்டை மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனால் கோவையின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் மாவட்டத்தின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக கோவையில் தொழில் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது.
கோவை மாநகரில் ரூ. 10,740.49 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்ட கொள்கை 2017ன் படி 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கமுடியும் என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோவையில் 15.84 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும், மதுரை நகர்ப்புற பகுதியில் 14.7 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்து மத்திய அரசு திட்டத்தை நிராகரித்து உள்ளது.
இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, சூரத், நாக்பூர், புனே, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆனால் நாளை பிரதமர் மோடி கோவை வரும் நிலையில் இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிப்பது துரதிஷ்டவசமானது என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் துறையினரிடம் நாம் பேசினோம். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு,

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் கூறுகையில், “கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், அதிக அளவில் வரி செலுத்தும் நகரமாகவும் உள்ளது. GDPயில் கோவையின் பங்களிப்பு அதிகம். இதைப்பார்த்து கோவைக்கு அதிக அளவில் IT நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் கோவையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல மெட்ரோ திட்டம் கட்டாயமாக கொண்டு வரப்பட வேண்டும். ஏற்கனவே தொடர்ச்சியாக காலதாமதம் செய்தவர்கள் இப்போது நிராகரித்துள்ளனர். நாளை பிரதமர் கோவைக்கு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி இருப்பதை என்ன என்று சொல்வது. பிற மாநில தேர்தல்களின் போது தமிழையும், தமிழர்களையும் கேவலமாக பேசும் பிரதமர் நாளை கோவைக்கு வந்து வணக்கம் என்று ஆரம்பிப்பார். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர திமுக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும்” என்றார்.

மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், “பிரதமர் நாளை கோவை வரும் நிலையில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். இந்தியாவிலேயே கோவை மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நகரம். கொச்சின் உள்ளிட்ட சின்ன நகரங்களுக்கு கூட மெட்ரோ ரயில் வழங்கப்பட்டுள்ளது. கோவையின் புறநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கணக்கில் கொண்டே மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது மத்திய அரசு கோவை மக்களுக்கு செய்யும் அநீதி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் நம்மிடம் பேசுகையில், “கோவை தொழில் துறை மெட்ரோ திட்டத்தை பெரிய அளவில் நம்பி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் தமிழ்நாடு. இதில் கோவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். அதிக வருமானம் ஈட்டும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தை அவசியம் கொண்டு வர வேண்டும். மாற்றான் தாய் மனப்போக்கோடு நடந்து கொள்ளும் மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் “கோவையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியில் மெட்ரோ திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மெட்ரோ திட்டத்தை நம்பி இங்கு ஏராளாமான ஐடி கம்பெனிகளும் வருகிறது. கொச்சின் நகருக்கு வந்தபோதே கோவைக்கும் மெட்ரோ திட்டம் வந்திருக்க வேண்டும். கோவைக்கு மெட்ரோ திட்டத்தை கொண்டு வர கொடிசியா சார்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்றார்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ தரப்பில் “கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்படவில்ல. இதுதொடர்பான விளக்க அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை காட்டிலும் தற்போது இந்த நகரங்களில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பது குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
