விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி.. திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் இல்லை தெரியுமா? சிபிஎம் பெ.சண்முகம் விளக்கம்

Published On:

| By Mathi

CPM Shanmugam DMK

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி’ குறித்த வாக்குறுதி இடம் பெறாதது குறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் சிபிஎம் கட்சியின் 5 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் இன்று மார்ச் 31-ந் தேதி கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலக் குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று, 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

சிபிஎம் வேட்பாளர்கள்

  • கட்சியினுடைய மாநில செயற்குழு உறுப்பினர், தோழர் என். பாண்டி அவர்கள் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் எம். சின்னதுரை அவர்கள் மீண்டும் கந்தர்வக்கோட்டை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
  • கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரும், கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் ஆர். செல்லசாமி அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
  • திருவொற்றியூர் தொகுதியில் கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எல். சுந்தரராஜன் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
  • கீழ்வேளூர் தொகுதியில் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தோழர் மாலி அவர்களுக்கு இரண்டு முறை வாய்ப்பு என்பது வழங்கப்பட்டு, அவருடைய அந்தப் பதவிக்காலம் என்பது நிறைவடைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் புதிய வேட்பாளராக, கீழ்வேளூர் தொகுதியில் நாகப்பட்டினம் கட்சியினுடைய மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினுடைய மாநிலத் துணைச் செயலாளருமான தோழர் டி. லதா அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இந்த 5 தொகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிற அனைத்து வேட்பாளர்களும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திமுக கூட்டணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிற இந்த அணி என்பது மிக வலுவான கூட்டணி. 2017-ஆம் ஆண்டிலிருந்து இந்த அணி தொடர்ந்தாலும், இப்போது அணியை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் பல புதிய கட்சிகள் இந்த அணியிலே சேர்க்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

திமுக ஆட்சியின் சாதனைகள்

மக்கள் நலத் திட்டங்கள்: கடந்த 5 ஆண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் நிறைவேற்றி இருக்கிற மக்கள் நலத் திட்டங்கள், குறிப்பாக மகளிர் நலத் திட்டங்கள் என்பது தமிழக மக்கள் அனைத்து வீடுகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக பெண் வாக்காளர்களுடைய பேராதரவைப் பெறக்கூடிய வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றி இருக்கிறது.

நடைமுறைச் சாத்தியமான தேர்தல் அறிக்கை: இப்போது வெளியிடப்பட்டிருக்கக்கூடிய 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை என்பது, மாநில அரசாங்கத்தினுடைய அதிகாரத்திற்கும் நிதிநிலைமைக்கும் உட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

நிச்சயமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடிய வகையிலேயும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயும், குறிப்பாக பெண்களுக்கான பல புதிய நலத் திட்டங்களை இந்தத் தேர்தல் அறிக்கையிலே அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்குமே இலவசமாக புதிய மின்மோட்டார்களை வழங்குவது என்பது இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து அநேகமாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்த மாநில அரசாங்கத்தாலும் சொல்லப்படாத ஒரு வாக்குறுதி என்பது இந்த மாநிலத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த இலவச மின்… ஏன்னா பல விவசாயிகள் பழைய மின்மோட்டார்களை வைத்து அதன் விளைவாகவே பல்வேறு விதமான மின் இழப்புகளும், பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது.

ஆகவே மாநில அரசாங்கம், மிகுந்த… திராவிட முன்னேற்றக் கழகம் மிகுந்த ஆலோசனைக்கு பிறகு அனைத்து மின் இணைப்பு வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக புதிய மின்மோட்டார்களை வழங்குவது என்பது மிகுந்த வரவேற்கத்தக்க ஒரு வாக்குறுதி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அதே மாதிரி கரும்புக்கும் நெல்லுக்குமான கொள்முதல் விலையை நாங்கள் உயர்த்துவோம் என்றெல்லாம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி

அதே நேரத்தில விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி சம்பந்தமாக இந்த தேர்தல் அறிக்கையிலே இல்லை என்கிற ஒரு குறையை விவசாயிகள் பலரும் என்னிடத்திலே தெரிவித்தார்கள். நேற்று மாலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்திலே, ‘இந்த விவசாயிகள் பெற்றிருக்கக்கூடிய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு… தள்ளுபடி செய்வோம் என்கிற வாக்குறுதியை நீங்கள் வழங்க வேண்டும்’ என்று நேற்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரடியாக சந்தித்தபோது நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசாங்கம் அனுமதி கொடுத்தால்தான் கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்கிற ஒரு புதிய நிலைமை என்பது ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை நாம் ஆட்சிக்கு வந்து பிஜேபி அதனால் அனுமதி தர முடியாத, தராத ஒரு நிலைமை ஏற்பட்டால் விவசாயிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதனால்தான் நான் அந்த வாக்குறுதியை வழங்கவில்லை என்று முதலமைச்சர் அவர்கள் விளக்கத்தைத் தெரிவித்தார்கள்.

சூப்பர் ஸ்டார் தேதல் அறிக்கை

2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கை என்பதும், இந்தத் தேர்தலில் அதுதான் பேசுபொருளாகவும், இதுவரை வெளிவந்திருக்கிற தேர்தல் அறிக்கைகளிலேயே சூப்பர் ஸ்டாராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை இருக்கிறது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். முழுமையாக 525 வாக்குறுதிகள் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த 525 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் அரசின் மூலமாகப் பலன் பெறாத எந்த ஒரு குடும்பமும் இல்லை என்கிற நிலைமையை நிச்சயமாக ஏற்படுத்த முடியும். ஆகவே அந்த தேர்தல் அறிக்கை இந்தத் தேர்தலில் நிச்சயமாக விவாதப் பொருளாக இருக்கும் என்பதை நான் வந்து சொல்ல விரும்புறேன்.

மத்திய அரசாங்கத்தினுடைய தமிழ்நாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்த ஒரு 5 ஆண்டு காலப் போராட்டத்தை இந்தக் கூட்டணி வலிமையாக நடத்தியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி தராமல் மறுப்பது, நிதி வழங்குவதிலே பாரபட்சமாக நடந்துகொள்வது, அரசியல் சாசனம் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரங்களைப் பறிக்கக்கூடிய வகையில் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்வது, வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி அரசியல் நடத்துவது போன்ற இந்த விஷயங்களெல்லாம் ஏற்கனவே கடந்த ஐந்தாண்டு காலமாகத் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்திருக்கிறது.

ஆகவே மத்திய அரசாங்கத்தினுடைய தமிழ்நாட்டுக்கு விரோதமான, உழைப்பாளி மக்களுக்கு விரோதமான இந்த அணுகுமுறையும் இந்தத் தேர்தலில் எங்களுடைய பிரச்சாரத்தில் மிக முக்கியமாக எடுத்துச் செல்வோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தன்னுடைய பிரச்சாரத்தில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். ஆகவே இந்த விஷயங்களெல்லாம் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக இருக்கக்கூடிய நிலையில், இவை அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கான ஒரு நல்ல சூழலைத் தமிழகத்திலே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.

வீடியோ இணைப்பு:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share