ஆயுத பூஜை கொண்டாட தெரியும்போது, ஏன் கரூரில் பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்த தெரியவில்லை என தவெக தலைவர் விஜய்யை நோக்கி பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஒன்றரை வயது குழந்தை முதல் 60 வயதான நபர் வரை பலரின் இந்த உயிரிழப்பு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அந்தவகையில் பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
குறிப்பாக விஜய் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு மாலை, வாழைக்கன்று கட்டி பூஜை செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட செலுத்தாமல், இப்படி ஆயுதபூஜை கொண்டாடுவது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.