சுனில் கடேடே, வெங்கடேஷ் கேசரி
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பிரதமர் மோடி பல சவால்களை முன்வைத்துள்ளார். வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு காய் நகர்த்துகிறது என்பதைப் பொறுத்து நிலைமை அமையும்.
எண்பதுகளின் முற்பகுதியில் மும்பையில், மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலேயின் இடத்திற்கு பாபா சாஹேப் போஸ்லே வந்தார். அதனால் மனமுடைந்த ஜவுளி ஆலைத் தொழிலாளி ஒருவர் போஸ்லேவைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மாநில, மத்திய அரசாங்கத்தில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்தனர். எதிர்க்கட்சியினரும் வணிகத் துறையைச் சேர்ந்த சிலரும்கூடக் கண்டித்தனர். முழு விஷயமும் விரைவில் அடங்கிவிட்டது. ஏனெனில் ஒரு முக்கியமான இடத்திலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இதுகுறித்து வாயைத் திறக்கவில்லை.
எந்த வகையில் பார்த்தாலும், நரேந்திர மோடி மறைந்த தலைவர் பாபாசாஹேப் போஸ்லே கிடையாது. போஸ்லே வேடிக்கையானவர், தீவிரத்தன்மை ஏதுமற்றவர். சர்ச்சைக்குரிய அறக்கட்டளைகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்துவந்த அந்துலேயிடம் சலிப்படைந்த இந்திரா காந்தி, போஸ்லேயைத் திடீரென உச்சத்திற்குக் கொண்டுவந்தார். அதில் ஒரு அறக்கட்டளைக்கு இந்திரா காந்தியின் பெயரை வேறு வைத்திருந்தார். விசுவாசமான காங்கிரஸ்காரர்கள் இதை தெய்வ குற்றமாகவே பார்த்தார்கள். அந்த நேரத்தில் இந்திரா இந்தியாவின் முடிசூடாத மகாராணியாக இருந்தார்.
தற்போதைய நிலைக்கு வருவோம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது பூர்த்தியானதைக் குறித்து டொனால்ட் ட்ரம்ப் முதல் விளாடிமிர் புடின், பெஞ்சமின் நெதன்யாகு போன்ற உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அனைத்து முக்கிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசாங்கத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார் என்று அவரது அபிமானிகள் புகழ்ந்தார்கள்.

வராமல் இருந்த வாழ்த்து
இந்தியாவில், நாடு முழுவதும் விரிவான கொண்டாட்டங்கள், விளம்பரங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டன. மோடியைப் புகழும் கட்டுரைகள் வெளியாயின. வணிக சமூகத்தினர், விளையாட்டுத் துறையினர், பிற முக்கியப் பிரமுகர்கள் உட்பட அவரது ஆதரவாளர்களும் அபிமானிகளும் பிரதமரை வானளாவப் புகழ்ந்தார்கள். ‘நன்றி, மோடி ஜி’ என்று ஒரு தேசமே எழுந்து நின்று சொன்னதுபோல இருந்தது. “ஒன்றுமில்லாததற்கு நன்றியா,” என்ற இகழ்ச்சியான குரலும் கேட்கத்தான் செய்தது.
ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய நபர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் மோடியைப் பாராட்டினர். மோடியின் கீழ் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்பதாகப் புகழுரைகள் அமைந்தன.
இந்த மிகப் பெரிய ஆரவாரத்தின் மத்தியில், ஒரு சம்பிரதாயமான வாழ்த்து மட்டும் வரவில்லை. அதுவே பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத்திடமிருந்து வாழ்த்துச் செய்தி வரவில்லை. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்புதான் மோடி ஒரு கட்டுரை மூலம், பகவத்தின் தலைமையைப் புகழ்ந்திருந்தார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மோடி ஒரு ‘ஸ்வயம்சேவக்’காகத் தனது பயணத்தைத் தொடங்கிய இடம் ஆர்.எஸ்.எஸ்.தான்.
பிரதமர், செப்டம்பர் 11ஆம் தேதி பகவத்தின் 75ஆவது பிறந்தநாளில் அவருக்குப் புகழாரம் சூட்டியிருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 14 மாதங்களாக பாஜக கட்சிக்கு ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தவறிய நேரத்தில், மோடி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்குச் சென்று சங்கத் தலைவருக்கு மரியாதை செலுத்தினார்.
நேசக்கரம் நீட்டிய மோடி
செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்.இன் பங்களிப்பையும் பாராட்டினார். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். புகழப்பட்டது.
கடந்த மாதம் தலைநகரில் நடந்த ஒரு சொற்பொழிவுத் தொடரில், மறைந்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோரோபந்த் பிங்களேயின் புத்தக வெளியீட்டின்போது, பிரதமர் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று தான் மறைமுகமாகக் குறிப்பிட்டதாக வெளியான ஊகங்களை பாகவத் நிராகரித்தார். பிறந்தநாளைக் கொண்டாடும் மரபு சங்கத்தில் இல்லாவிட்டாலும், எந்தவொரு ஸ்வயம்சேவக்குடைய 75ஆவது ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருக்க வேண்டும். குறிப்பாக, வேறு எந்தத் தலைவரையும் போலல்லாமல், மோடி ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளார்.
சங்கமும் அதன் தலைவரும் பிரதமருக்கு முறையாக வாழ்த்து தெரிவிக்க விரும்பாதது, மோடியைக் கையாள்வதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இருக்கக்கூடிய தர்மசங்கடமான நிலையைக் குறிக்கலாம். மோடி, பாகவத்தின் தலைமையைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குள் ஒரு பிரிவில் மோடியின் செல்வாக்கு பெரிதும் வளர்ந்துள்ளது என்பதும் உண்மை.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் இரண்டாம் நிலையில் இருப்பவரும், அதன் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பவருமான தத்தாத்ரேயா ஹோசபாலே, பிரதமருடன் நெருக்கமாக இருப்பதாகச் செய்திகள் வந்தன. ‘இந்து ஹிருதய சாம்ராட்’ என்று புகழப்படும் மோடி, பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும்விட மிகப் பெரியவராக மாறியுள்ளார். தனது ஆவேசமான இந்துத்துவத்தின் மூலம் பாஜகவையும் அதன் சித்தாந்தத்தையும் முன் எப்போதும் இருந்திராத அளவில் விரிவாக்கியுள்ளார். தேசியத் தலைநகரில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு ஒரு பெரிய கட்டிடம் இருப்பதைப் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அவஸ்தைகள்
ஒரு தலைவராக மோடியின் எழுச்சி ஆர்.எஸ்.எஸ்.ஸையும் அதன் தலைமையையும் குன்றச் செய்துள்ளது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ரீதியான பிரச்சினைகளுக்குள் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கடந்த மக்களவைத் தேர்தலின்போது கூறியது சங்கத்தை உலுக்கியிருக்கும். பாஜக பாதுகாப்பான கைகளில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். ‘வழிகாட்டும் அமைப்பாக’ மட்டும் செயல்பட்டால் போதும் என்பதுதான் நட்டாவின் சர்ச்சைக்குரிய அறிக்கையின் பொருள்.
கட்சி நிர்வாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு, அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். அடுத்த பாஜக தலைவராக, சொந்தமாக முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு தலைவரை நியமிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மோடியின் 75ஆவது பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வாழ்த்துத் தெரிவித்திருந்தால் அது நல்லுணர்வு அடையாளமாக இருந்திருக்கும். மோடியின் மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதாகவும் பார்க்கப்பட்டிருக்கும்.

பகவத் மோடிக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தால் மோடியைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ். யோசிக்கிறது என்னும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
நிழல் யுத்தம்
மோடி தன்னைப் பற்றிக் கட்டமைத்துள்ள விஸ்வரூப பிம்பம், ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆயிரம் முறை யோசிக்க வைத்துள்ளது. மோடியின் செல்வாக்கு அப்படிப்பட்டது. அவரது விமர்சகராக அறியப்பட்ட சஞ்சய் ஜோஷி, பிரதமரின் தலைமையைப் பாராட்டிய பின்னரும்கூடக் கடந்த 11 ஆண்டுகளாக அரசியல் வனவாசத்தில் இருக்கிறார். மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆர்.எஸ்.எஸ். மௌனம் காப்பது பக்தர்கள், விமர்சகர்கள் இருவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
2014முதல் பிரதமரை விஸ்வகுரு என்று பாஜக போற்றுகிறது. கட்சிக்கும் சங்கத்துக்கும் உள்ள முரண்பாடு அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ட்ரம்ப், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்த நேரத்தில், நாக்பூர் மௌன விரதம் காக்கிறது.
தனது தாராளவாத பிம்பத்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர இந்துத்துவச் செயல்திட்டத்தை நீர்த்துப் போகச்செய்த அடல் பிஹாரி வாஜ்பாயின் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு இருந்த தயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்து ஹிருதய சாம்ராட் என்ற மோடியின் பிம்பத்தையும் நாக்பூர் அங்கீகரிக்கவில்லை.
கடந்த தேர்தலில் மோடியால் பாஜகவுக்குப் பெரும்பான்மை பெற்றுத்தர முடியாமல்போன பிறகு, பிரதம சேவகன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமரின் ஆணவத்தை ஆர்.எஸ்.எஸ். அங்கீகரிக்கவில்லை.
மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் இடையில் நடக்கும் நிழல் யுத்தம் இன்னும் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குப் பல சவால்களை முன்வைத்துள்ளார். வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். தனது கப்பலை எவ்வாறு இயக்குகிறது என்பதைப் பொறுத்து நிலைமை அமையும்.
அவஸ்தையான அமைதி ஏமாற்றக்கூடியது. பாஜக தலைவர் பதவி என்ற குழப்பமான பிரச்சினையில் எடுக்கப்படும் அல்லது எடுக்கப்படாத ஒரு முடிவு, பிளவு எவ்வளவு ஆழமானது என்பதற்கான உறுதியான அடையாளமாக இருக்கும்.
சுனில் கடேடேவும் வெங்கடேஷ் கேசரியும் புதுதில்லியைச் சேர்ந்த இதழாளர்கள்.