மோடி- ஆர்.எஸ்.எஸ்: பாசிசக் கொக்கியிலிருந்து பிரகாஷ் காரத் விடுவித்தது ஏன்?

Published On:

| By Minnambalam Desk

ஃபராஸ் அஹ்மது Prakash Karat free Modi

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை Prakash Karat free Modi

சிபிஐ (எம்) கட்சியில் பொலிட்பீரோ மற்றும் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் காரத், தமிழ்நாட்டில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் அக்கட்சியின் 24ஆவது காங்கிரஸையொட்டி, சுற்றுக்கு விட்டுள்ள நகல் சுற்றறிக்கையில் ’அரசியல் திசைவழி’ என்ற பிரிவு ”சுமார் பதினோரு ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார சக்திகள் நவீன பாசிச குணங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்திருப்பதைக் காட்டுகிறது” என்றும் ”மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி திடீரென்று அகாலமாக மரணமடைந்த பிறகு கட்சியின் பொலிட் பீரோ, மத்தியக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகாஷ் காரத், பிப்ரவரி 4 அன்று கையொப்பமிட்டு அனைத்து மாநிலக் குழுக்களுக்கும் அனுப்பியுள்ள குறிப்பு, ‘நவ –பாசிச’ என்பதற்கு விளக்கம் தந்துள்ளது.

’பாசிச’ அரசாங்கம்!

அதாவது, “ நாம் மோடி அரசாங்கத்தை பாசிச அல்லது நவ-பாசிச அரசாங்கம் என்று கூறுவதில்லை. இந்திய அரசை ஒரு பாசிச அரசு என்று வகைப்படுத்தவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அரசியல் முன்னணியான மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான பத்தாண்டுகால ஆட்சிக்குப் பிறகு பாஜக – ஆர்.எஸ்.எஸ்.கையில் ஆட்சி குவிந்திருக்கிறது என்பதையும் இதன் விளைவாக ‘நவ-பாசிச குணாம்சங்கள்’ வெளிப்படுவதையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்” என்று அந்தக் குறிப்பு கூறுகிறது.

அவர் மேலும் விளக்கிக் கூறுகையில், ‘குணாம்சங்கள்’ என்ற சொல் அம்சங்களையோ போக்குகளையோ குறிக்கிறது. ஆனால், அவை ஒரு நவ-பாசிச அரசாங்கமாகவோ அரசியல் அமைப்பாகவோ வளர்ச்சியடைவில்லை என்றும் கூறுகிறது.

இந்த நிலைப்பாடு சிபிஐ, சிபிஐ (எம்-எல்) ஆகியவற்றின் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது என்பதை இந்தக் குறிப்பு ஒத்துக் கொள்கிறது . சிபிஐ ,மோடி அரசாங்கத்தை ஒரு ’பாசிச’ அரசாங்கம் என்றும் சிபிஐ (எம்-எல்) ,பாசிச அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது (put in place) என்றும் கூறுகின்றன.

ஆக, நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்திய அரசு ஒரு பாசிச அரசாக மாறியுள்ளது என்பதுதான் இடதுசாரி சக்திகளிடையே மேலோங்கியுள்ள கருத்தாக உள்ளது என்பதை காரத் ஒப்புக் கொள்கிறார்.

அரசியல் களத்தில் அதிர்ச்சி!

இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அதிகாரபூர்வமான ஏடான ‘ஆர்கனைசர்’ பிப்ரவரி 25ஆம் தேதி இதழில் மனத் திருப்தியுடன் சிபிஐ (எம்) கட்சியின் இந்த நகல் தீர்மானத்தைக் கருத்தில் எடுத்துக் கொண்டு, “ நகல் தீர்மானத்தில் சிபிஐ (எம்) பாஜ.க –ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை ‘பாசிசம்’ என்று அடையாளப்படுத்த மறுத்துள்ளதானது எதிர்க்கட்சிகளின் கருத்துகள், நிலைப்பாடுகள் ஆகிய அனைத்தையும் (opposition eco system) அசைத்துக் குலுக்கியுள்ளது” என்று எழுதியுள்ளது.

மேலும், ”இந்தியாவின் அரசியல் களம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ள இந்த நகல் தீர்மானம், அதற்கு பதில் சொல்வதில் காங்கிரஸ் கட்சியையும் பிற எதிர்க்கட்சிகளையும் தள்ளாடவும் தட்டுத் தடுமாறவும் செய்துள்ளது” என்றும் எழுதியுள்ளது.

சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தயாரித்துள்ள இந்த நகல் தீர்மானத்திலிருந்து ஒரு விஷயம் தெளிவாகின்றது. அதாவது, இந்த நகல் தீர்மானம் அப்படியே (கட்சிக் காங்கிரஸில் ) ஏற்றுக் கொள்ளப்படுமானால், அது காலஞ்சென்ற சீத்தாராம் யெச்சூரியின் தலைமையின் கீழ் இருந்த கட்சியின் திசைவழியிலிருந்து கணிசமான அளவில் இப்போது அக்கட்சித் தலைமை விலகிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பிடும்.

சீத்தாராம் யெச்சூரி தனது பதவிக் காலம் முழுவதிலும் மோடி ஆட்சிக்கும் அதன் அரசியல் பள்ளியான ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எதிரான பரந்துபட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, பாசிச-எதிர்ப்பு முன்னணியை உருவாக்கப் பாடுபட்டார்.

மேலும், வரப்போகின்ற கட்சிக் காங்கிரஸில், கட்சியைத் தன் நிலைப்பாட்டின் பக்கமாகக் கொண்டு செல்வதில் காரத் வெற்றியடைவாரேயேனால், அதன் பொருள், ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் முதன்மையான எதிர்க் கட்சியாக இருந்த சிபிஐ (எம்), முதன்மை நீரோட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து விலகிச் செல்கிறது என்பதுதான். அதன் விளைவாக கடந்த 11 ஆண்டுகளில் மோடியும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் செய்து வந்தவற்றுக்கு ஒப்புதல் தருவதாகவே இருக்கும் என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸ் இந்து ராஷ்ட்ரம்!

இது மோடியை மட்டுமின்றி, பாஜகவையும் இந்தியாவில் வலதுசாரி சக்திகளை வலுப்படுத்துவதற்கு மூலாதாரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் எதிர்க்கின்ற, விமர்சிக்கின்ற கருத்துகளுக்கான வெளியைத் திட்டமிட்டுச் சுருங்கச் செய்துள்ளதற்கு ஒப்புதல் தருவதாகவே இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் `1924 செப்டம்பர் 27இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு மூன்று மாதத்திற்குள், அதாவது 1924 டிசம்பர் 25இல் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூரில் நிறுவப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வழிகாட்டியாக இருந்த டாக்டர் எம்.எஸ். மூஞ்செ, 1931 மார்ச் முதல் 24 வரை இத்தாலியில் பயணம் சென்று அப்போதைய இத்தாலியப் பிரதமராக இருந்த பெனிட்டோ முஸ்ஸோலினியைச் சந்தித்தார். அப்போது அவர் எட்டு வயதிலிருந்து 14 வயதுவரையிலும் 14 வயதிலிருந்து 18 வயது வரையிலும் சிறியவர்களுக்கும் இளைஞர்களுக்குமான பாசிச அமைப்பு) இதர இராணுவப் பள்ளிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு அவற்றைப் பார்வையிடவும் பாசிசத்தின் மூலம் சமுதாயத்தை எப்படி இராணுவத்தன்மையாக்குவது என்பதை அவர் மனதில் பதிய வைப்பதற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

பாசிசக் கல்வி கற்பிக்கும் பாசிச இளைஞர் அமைப்பையும் பார்வையிட்டார். இந்து இளைஞர்களை இராணுவத்தன்மையாக்குவதன் மூலம் இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்தையும் அதை நடைமுறைப்படுத்துவதையும் நிலைக்கச் செய்வதையும் மூஞ்செ இத்தாலிய பாசிஸ்டுகளிடமிருந்து கடன் வாங்கினார். அவற்றை ஹெட்கேவரும் அவரது அணியினரும் நடைமுறைப்படுத்தினர்.

யதார்த்தத்தில் , ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மனதிலோ அதைப் பின்பற்றுபவர்களின் மனதிலோ இந்தியா என்பது இந்துக்களின், இந்துக்களுக்காக, இந்துக்களால் உருவாக்கப்படும் இந்து ராஷ்டிரமே என்ற கருத்துப் படிந்திருந்ததில் எந்தக் குழப்பமும் இருந்ததில்லை. இந்தியாவிலுள்ள மிகப் பெரிய சிறுபன்மையினரான முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதற்காகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கான முயற்சி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இரண்டாவது தலைவராக (Sarsanghchalak ) இருந்த மாதவ சதாசிவராவ் கோல்வால்கர் – அவரை ஆர்.எஸ்.எஸ்., ‘பாரத மாதாவின் தலைசிறந்த புதல்வன்’ என்றும் ’இந்து சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மிகப் பெரும் கொடை’ என்றும் கருதுகிறது – உருவாக்கிய கருத்தியல் கட்டமைப்பால் வழிகாட்டப்பட்டது ( ஆதாரம்: ஷம்ஷுல் இஸ்லாம் எழுதியுள்ள ‘ Golwalkar: A critique’ என்ற ஆங்கில நூல்)

பாசிசத்திற்கான முக்கிய அஸ்திவாரம்!

தன் வாழ்க்கை முழுவதிலும் கோல்வால்கர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் இரண்டாந்தரக் குடிமக்களாவே இருக்கக்கூடிய ஓர் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முனைந்தார். அந்த இந்து ராஷ்டிரத்தில் சீக்கியம், சமணம், பெளத்தம் ஆகியவை சுயேச்சையான மதங்களாக அன்றி, இந்துயிசத்தின் பகுதிகளாகவே இருக்கும். அவரது தலைமையின் கீழ் ஆர்.எஸ்.எஸ்.ம் ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவம் நிலவுகின்ற இந்தியாவை உறுதியாக எதிர்க்கின்ற வலுவான அமைப்பாக வளர்ச்சி பெற்றது. அவர் இந்துத்துவா என்ற கருத்தாக்கத்தை உறுதியாகப் பற்றி நின்றார்.

இந்துத்துவம் என்பதில் உள்ளார்ந்துள்ளவை சாதியம், இனவாதம், ஏகாதிபத்தியம் ஆகியனவாகும் (ஆதாரம்: ஷம்ஷுல் இஸ்லாம் எழுதிய மேற்சொன்ன நூல்.) விஸ்வ குரு மோடியின் பக்தர்கள், அவர் இந்துக்கள் உலகம் முழுவதையும் ஆள்வதற்கு தலைமை தாங்குவதற்காக இந்த பூமிக்கு வந்திறங்கிய அவதாரமே ஆவார் என்று கூறுகிறார்கள்.

இருப்பினும், மோடியையோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையோ பாசிசவாதிகள் என்று காரத் கருதுவதில்லை. அவர்களை நவ-பாசிஸ்டுகள் என்றுகூடக் கருதுவதில்லை. ஆனால், பாசிசம் என்பதை உலகம் எவ்வாறு வரையறை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

அதீத தேசியவாதம், தேசத்தின் மறுபிறப்பு என்ற கட்டுக்கதை ஆகியவற்றின் இணைப்பே பாசிசத்திற்கான முக்கிய அஸ்திவாரம் என்று ராபர்ட் காப்ஸ்டன் (Robert Paxton) என்ற அறிஞர் கருதுகிறார். வெறி உணர்ச்சி மிகுந்த தேசியவாதம், வரலாற்றை சதித்தன்மை கொண்டதாகவும் நல்லதிற்கு தீமைக்கும் நடக்கிற சண்டையைக் கொண்டதாகவும் கருதுகிற பார்வை ஆகியவற்றின் இணைப்பே பாசிசத்தின் அடிப்படை என்றும், இந்தப் பார்வை, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’, அரசியல் கட்சிகள், சமூக வர்க்கங்கள், சேர்த்துக் கொள்ளப்பட முடியாத சிறுபான்மையினர், தங்கள் வருவாயை விருப்பம் போலச் செலவிட்டுக் கொண்டிருப்பவர்கள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் ஆகியோரால் பலகீனப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்று கருதுகிறது.

இடதுசாரிகளின் ஒற்றுமை!

ரோஜர் கிரிஃபித் (Roger Griffin) என்ற அறிஞர், தேசம் என்பது மக்களை அவர்களது மூதாதையர் மரபுகளால் ஒன்றிணைக்கின்ற ஓர் அமைப்பே தேசம் என்றும், அது அவர்களை ஒன்றிணைப்பதற்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்ற சக்தியே என்றும் கருதுவதுதான் பாசிசத்தின் மையக்கூறு என்று கருதுகிறார்.

அது தேசத்தையோ அல்லது மரபினத்தையோ மற்றெல்லாவற்றுக்கும் மேலானவையாக உயத்தியும் ஒற்றுமை, வலிமை, தூய்மை ஆகியவற்றை வழிபடுவதை ஊக்குவித்தும் வரப்போகின்ற ஒரு தேசிய மறுபிறப்பைச் சாதிப்பதன் மூலம் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்கிறது.

ஐரோப்பிய பாசிசம், ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் ஐரோப்பியர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற இனவாதக் கருத்தைப் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ளது. அது, மார்க்சியம், ஜனநாயகம், தடையற்ற சந்தைகள், சமத்துவ நோக்கு, கம்யூனிசம், தாராளவாதம், சோசலிசம் ஆகியவற்றுக்கு எதிரானதாக வளர்ந்தது.

ஆக, இடதுசாரி சக்திகள் – வலதுசாரி சக்திகள் என்று வழக்கமாக செய்யப்படும் எதிரெதிர் இடங்களில் அதீத வலப் பக்கமாக இருப்பது பாசிசம். சர்வாதிகாரத் தலைவரைக் கொண்டிருத்தல், மையப்படுத்தப்பட்ட எதேச்சாதிகாரம், இராணுவவாதம், எதிர்க்கட்சிகளை பலவந்தமாக ஒடுக்குதல், சமுதாயம் இயல்பாகவே மேல் – கீழ் வரிசையில் அமைந்துள்ளது என்ற கருத்தின் மீதான நம்பிக்கை, தேசத்தின் அல்லது இனத்தின் நன்மைகள் என்று கருதப்படுவதற்கு தனிமனிதர்களின் நலன்களைக் கீழ்ப்படியச் செய்தல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவற்றை வலுவாகவும் கறாராகவும் கட்டுப்படுத்தி, தனிநபர் சுதந்திரத்தை இல்லாமல் செய்து, ஒரேசீரான சிந்தனையையும் வாழ்க்கை முறையையும் மக்கள் பின்பற்றும்படி செய்தல் ஆகியவை பாசிசத்தின் தனித்தன்மைகளாகும்.

இப்போதுள்ள மோடி அரசாங்கம், காரத்தின் பார்வையின்படி பாசிசம் அல்ல என்றால் பாசிசம், பாசிஸ்டுகள் என்ற சொற்களை அகராதியிலிருந்து நீக்கிவிடுவதே நல்லது.

சரியாகச் சொல்வதென்றால், பாசிச கொக்கியிலிருந்து மோடியையும் அவரது எதேச்சாதிகார ஆட்சியையும் காரத் விடுவிப்பது இது முதல் முறையல்ல. யெச்சூரி உயிரோடு இருந்தவரை, காரத்தின் ஆய்வுரை கட்சியால் காத்திரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஏனெனில் அது அப்போது கட்சியின் திசைவழியாக இருக்கவில்லை. ஆனால், அவர் வரப்போகின்ற காங்கிரஸில் அதை ஏற்றுக் கொள்ளும்படி உந்தித் தள்ளுகிறார்.

அவரும்கூட இடதுசாரிகளின் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், அவரது அரசியல் திசைவழி ஏற்றுக் கொள்ளப்படுமானால், இடதுசாரிகளின் ஒற்றுமை என்பது அபாயத்துக்குள்ளாகும்.

அதுமட்டுமல்ல, தேசத்தைப் பொருத்தவரை மட்டுமல்லாது சிபிஐ(எம்) கட்சியின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்கூட பரந்த அளவிலான மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் கூட்டணி தேவைப்படும் நேரத்தில், காரத்தின் திசைவழி சிபிஐ (எம்) கட்சியை அரசியல்ரீதியாகத் தனிமைப்படும் நிலைக்குத் தள்ளுவதாகத் தோன்றுகிறது.

 (‘மெயின்ஸ்ட்ரீம்’ ஆங்கில வார ஏட்டின் 22 மார்ச் 2025 இதழில் ஃபராஸ் அஹ்மது எழுதியுள்ள Why Karat lets Modi/RSS off the Fascism hook? என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)

நன்றி: மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார இதழ்

கட்டுரையாளர் குறிப்பு

ஃபராஸ் அஹ்மது – 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை, சண்டிகர், டெல்லி மற்றும் தேசிய அளவில் குற்றம், அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். “அசாசினேஷன் ஆஃப் ராஜீவ் காந்தி : ஆன் இன்சைடு ஜாப்” என்ற புத்தகத்தை எழுதியவர். பல்வேறு ஊடகங்களுக்கு ஃப்ரீலான்சராக கட்டுரைகளை எழுதி வருகிறார்.

caste supremacy and male chauvinism special story SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share