தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மார்ச் 17-ந் தேதி வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் வைகோவின் பதில்களும்:
கேள்வி: திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது உங்களுக்கு வருத்தமாக இல்லையா?
வைகோ: நான் அரசியலில் 62-வது ஆண்டாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்னோடு இருப்பவர்கள் 32 ஆண்டுகளாகத் தோல்விகள், ஒரு சீட்டு கூட இல்லாத காலத்திலும் உறுதியாக நிற்கிறார்கள். திமுக பல கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியுள்ளது, பல நிபந்தனைகள் அவர்களுக்கு இருக்கிறது. “இந்தத் தடவை இந்த 4 இடங்களை மட்டும் ஏத்துக்கோங்க” என்று அவர்கள் சொன்னபோது, நாங்கள் எங்கள் கோரிக்கையைச் சொன்னோம். ஆனால், “இப்போது இந்த 4 இடங்கள் தான் கொடுக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.
நான் கலைஞர் அவர்களின் இறுதி நாட்களில் அவருக்கு ஒரு வாக்கு கொடுத்துவிட்டேன். “ஒரு காலத்தில் உங்களோடு இருந்தபோது உங்களுக்கு எப்படிப் பக்கபலமாக இருந்தேனோ, அதுபோல தம்பி ஸ்டாலினுக்கும் நான் பக்கபலமாக இருப்பேன்” என்று சொன்னேன். நான் பேசிய அந்த நிலையில், அவர் பேச முடியாத நிலையிலும் என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். அதை நான் மறக்கவில்லை.
திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், நாம்தான் அதன் ஈட்டி முனை (Spearhead). லட்சியங்களில் உறுதியான அந்த இயக்கமே மதிமுக. இந்துத்துவா மற்றும் சனாதன சக்திகள் தமிழகத்திற்குள் நுழைந்து மக்களை ஏமாற்ற விடக்கூடாது என்பதற்காகவே இந்தச் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். வடநாட்டில் நடப்பது போலத் தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, திராவிட இயக்கத்தின் கவசமாக இருக்கும் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக உறுதியாக இருக்கிறேன். அதனால் அவர்கள் சொன்னதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். எங்கள் இயக்கத் தோழர்களுக்குத் தலைமை எடுக்கும் முடிவை ஏற்கும் மனப்பக்குவம் உண்டு. இதை நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
கேள்வி: மதிமுக வேட்பாளர் பட்டியல் எப்பொழுது வெளியாகும்?
வைகோ: எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்தக் கட்சிக்கு என்பது குறித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகுதான் ‘தொகுதி அடையாளம் காணும்’ (Identification) பணி நடக்கும். எண்ணிக்கை முடிவாகிவிட்டது, இனிமேல்தான் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் நடக்கும். அப்போது எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை அடையாளப்படுத்திச் சொல்வோம்.
திமுக தனது அரசாங்கத்தைத் தன்னந்தனியாக (On its own) அமைக்கும். அவர்கள் பெறும் பெரும்பான்மை மூலமே ஆட்சி அமைப்பார்கள். எனவே, கூட்டாட்சி மந்திரிசபை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும் என்பது என்னுடைய கணிப்பு.
கேள்வி: கலைஞருக்குக் கொடுத்த வாக்குறுதியினால், அந்த நிர்பந்தத்தினால் தான் 4 இடங்களை ஒத்துக்கொண்டீர்களா?
வைகோ: ‘நிர்பந்தம்’ என்கிற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? நல்ல மனதோடு, 30 வருடம் அவரோடு இருந்தவன் என்கிற கவலையோடு அவரைப் பார்க்கப் போனேன். அப்போது தம்பி ஸ்டாலின் முன்னிலையிலேயே என் மனதில் பட்டதை அவரிடம் சொன்னேன். அந்த நிலைப்பாட்டில் இருந்து இனி எந்த மாற்றமும் இல்லை, அதில் உறுதியாக நிற்கிறோம்.
கேள்வி: இனி வருங்காலங்களிலும் இதே நிலைதான் நீடிக்குமா?
வைகோ: ஒரு நிலைப்பாட்டைச் சொன்னால் அதில்தான் நிற்போம் என்று சொல்லிவிட்டேன். இனி வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது உங்களுக்கே தெரியுமா?
கேள்வி: திமுக ஒவ்வொரு இடமாகக் குறைத்துக்கொண்டே வந்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?
வைகோ: அதை அப்புறம் பார்க்கலாம். மற்ற கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுத்திருக்கிறார்கள், எனக்கு எத்தனை கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதைக் கணக்கில் கொள்வார்கள். இவ்வாறு வைகோ கூறினார்.
