2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது; ஆனால் நாங்கள் அதனை ஏற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக கிரிஷ் சோடங்கர் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: எங்கள் குழுவும் திமுக குழுவும் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது.
திமுக குழுவிடம் எங்களது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை கொடுத்து உள்ளோம். அதனை திமுக ஏற்கும் என நம்புகிறோம். அதன் பிறகுதான் எங்களால் இந்தப் பேச்சுவார்த்தையை தொடர முடியும்.
தற்போது எங்களின் முன்னுரிமை சட்டமன்றத் தேர்தல் தான். அதன் மூலம் சட்டமன்றத்தில் எங்களுக்குப் போதுமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கிடைப்பார்கள், அப்போதுதான் எங்களால் ராஜ்யசபாவிற்கு எங்கள் கட்சியின் எம்.பி.யை அனுப்ப முடியும்.
25 இடங்கள் தர முன்வந்த திமுக
திமுக எங்களுக்கு 25 இடங்களை வழங்க முன்வந்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு என்ன தேவையோ அதை திமுக குழுவிடம் தெரிவித்துவிட்டோம்.
திமுக ஏன் அதிக தொகுதி தர வேண்டும்?
நாங்கள் நீண்ட காலமாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், அவர்கள் எங்களின் பழைய கூட்டணிக் கட்சி. அவர்கள் எப்போதெல்லாம் நெருக்கடியில் இருந்தார்களோ, அப்போதெல்லாம் எங்கள் தொகுதிகளைக் குறைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம். இப்போது அந்தத் தொகுதிகளை எங்களுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டிய தருணம் திமுகவுடையது.
திமுகவுக்காக காத்திருப்பு
தொகுதிகள் எண்ணிக்கை குறித்த தெளிவான முடிவு திமுக தரப்பிலிருந்து வந்த பிறகுதான் என்னால் விரிவாகக் கூற முடியும். அடுத்தக் கூட்டம் இன்னும் ஒரு ஓரிரு நாட்களில் நடக்கும். அவர்களின் அழைப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இடங்களின் எண்ணிக்கை மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய எங்களது விருப்பப் பட்டியலை அவர்களிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டோம்.
மேலிடத்தின் தலையீடு குறித்து இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு கட்சித் தொண்டர்களும், ராகுல் காந்தி, கார்கே மற்றும் வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்த தமிழ்நாட்டின் 42 முக்கியத் தலைவர்களும் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர். அந்த 42 தலைவர்களில் 38 பேர் திமுகவுடனான பேச்சுவார்த்தையை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த ஒரு நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். அந்த வழிகாட்டுதலின்படிதான் நேற்று திமுக குழுவிடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
கட்சியை தியாகம் செய்ய முடியாது..
தற்போது எங்களது பழைய கூட்டணிக் கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதே எங்களது நோக்கம், அதற்காகக் கட்சியை தியாகம் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
விஜய் கட்சிக்கு நல்ல வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஒரு புதிய கட்சி, அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. இளைஞர்களிடையே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸின் பலத்தையும், தமிழகத்தில் ராகுல் காந்தியின் செல்வாக்கையும் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.
