5 தொகுதிகளை CPI ஏற்றது ஏன்? ‘பெரிய அண்ணன்’ போல நடந்ததா திமுக? கட்சிக்குள் அதிருப்தியா? மு.வீரபாண்டியன் விளக்கம்- முழுமையாக!

Published On:

| By Mathi

CPI Veerapandian Press Meet

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது சாதாரணமாக வந்து போகிற தேர்தல் அல்ல. நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் என்பது இயல்பானது; வெற்றி தோல்வி இயல்பானது.

ADVERTISEMENT

ஆனால் இன்றைக்கு பாஜக, ஒரு பதற்ற அரசியலை சுமந்து வருகிறது, வகுப்புவாத அரசியலை சுமந்து வருகிறது. அமைதியான தமிழ் மண்ணைச் சீர்குலைக்க துடிக்கிறது.

முதல் குறிக்கோள்

ADVERTISEMENT

எனவே இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதல் குறிக்கோள் என்பது பாஜகவை அதன் கூட்டணியை வீழ்த்துவது தான். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்மொழிந்திருக்கும் கூட்டாட்சி, சமூக நல்லிணக்கம், சமூக நீதி, நாடாளுமன்ற ஜனநாயகம், நமது முன்னோர்கள் இதுகாலம் நமக்கு காத்து வகுத்தளித்திருக்கிற ஜனநாயக விழுமியங்கள் இதை காக்கிற ஒரு பெரும் போரை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி இருக்கிறார்.

எனவே முன்னிலும் அதிகமாக அவருடன் நாங்கள் நெருக்கமாக நின்று பாஜக, அதன் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று பேசினோம்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நூற்றாண்டு கால கட்சி. நாடாளுமன்றங்களில், சட்டமன்றங்களில் அது வீற்றிருந்த காலங்களும் உண்டு, வீற்றில்லாத காலங்களும் உண்டு. ஆனால் நாட்டின் இறையாண்மை, தேசத்தின் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமை, இந்தியாவினுடைய சமூக நல்லிணக்கம் என்றுதான் அது எப்பொழுதும் போராடி வந்திருக்கிறது, குரல் எழுப்பி வந்திருக்கிறது. எனவே சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கைகள் ஏற்ற இறக்கங்களாக இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் எப்போதும் தங்களது உரிமைகளை, அரசியல் கடமைகளை என்றைக்கும் கடந்து சென்றதில்லை.

அந்த வகையில் சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் இடம் வேண்டும் என்று நாங்கள் கூறுவதற்கே காரணம் உழைக்கும் மக்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிரான குரல் அங்கே ஒலிக்க வேண்டும் என்கிற அரசியல் நிலையில் தான் நாங்கள் கூட்டணி அமைக்கிறோம், பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம்.

திமுகவுடனான 3 கட்ட பேச்சுவார்த்தைகள்

திமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்டது- கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டோம், அதைவிட கூடுதலாக வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். அதற்குரிய தார்மீகம் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கிறது. நாடு முழுவதும் கிளை பரப்பி இருக்கிறோம், அமைப்பாக இருக்கிறோம், அரசியலாக இருக்கிறோம்.

வெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து எங்களை மதிப்பீடு செய்யக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

3 கட்ட உரையாடல், பின்னர் முதல்வர் ஸ்டாலின், நிறைவாக எல்லாவற்றிற்கும் மதிப்பளித்து ‘பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கிற காரணத்தினால் நாங்கள் உட்பட எல்லோரும் குறைத்துக் கொள்கிறோம். எனவே நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

கூடுதல் கேட்டோம்.. 6- தொகுதிகளாவது கேட்டோம்

‘6 தொகுதிகளையாவது நீங்கள் பரிசீலிக்க வேண்டும்’ என்று நாங்கள் கேட்டோம். நிறைவாக ”அதற்கும் வாய்ப்பில்லை ஒத்துழைக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டதற்கிணங்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களை ஏற்று இன்றைக்கு, திமுக தலைவர்- தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.

எங்கள் அணிகளை சோர்வடைய செய்யும்தான்..

மீண்டும் சொல்கிறோம், இந்த 5 தொகுதிகள்தான் என்பது எங்களது கட்சி அணிகளைச் சோர்வடையச் செய்யும்தான். ஆனாலும் கூட அதற்கும் மேல் எங்களுக்கு அரசியல் இருக்கிறது. பாஜகவை வீழ்த்துவது என்கிற அந்த அரசியலில் சில நேரங்களில் நாங்கள் இப்படி எங்களுக்குரிய இடங்களைக் கூட கடந்து செல்கிறோம்.

ஆனால் எங்களுக்குரிய அரசியல் நிலையிலிருந்து நாங்கள் ஒருபோதும் கடந்து செல்ல மாட்டோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பது மட்டுமல்ல, இந்திய நாட்டின் சட்டத்தின் ஆட்சி முறையை, ஜனநாயக நாடாளுமன்ற முறைமையை, எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் வேறெந்த நாட்டிலும் நிலவாத ஒரு கூட்டு ஒற்றுமை இயல்பு நிலை கூறுகளைச் சிதைக்கத் துடிக்கிறது பாஜக கருத்தியல்.

எனவே அதை காக்கிற பெரும் போரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டிருக்கிறது. அதற்காகவே நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். அதற்கான கையெழுத்து தான் இது. இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மு.வீரபாண்டியன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் மு.வீரபாண்டியன் அளித்த பதில்களும்:

கேள்வி: 2017-லிருந்து தொடர்ந்து கூட்டணியில் இருக்கீங்க. புதிதாக இணைந்திருக்கக்கூடிய கட்சிகளைக் காரணம் காட்டி உங்களுக்குத் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக ஏதாவது நெருக்கடி கொடுத்திருக்கிறதா? அதை நெருக்கடியா நீங்க பார்க்குறீங்களா?

மு. வீரபாண்டியன்: ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். எப்போது பேசினாலும் உள்ளத்திலிருந்து பேசுவோம், உண்மையை பேசுவோம், அரசியலாகத் தான் பேசுவோம். 4 கட்ட பேச்சுவார்த்தையில் ஒருபோதும் எங்களை திமுக நிர்பந்திக்கவில்லை, வேண்டுகோள்தான் விடுத்தார்கள். ‘பல கட்சிகள் சேர்ந்திருக்கிற காரணத்தினால் நீங்கள் இதைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று முதல்வரே கேட்டுக்கொண்டார். ஒருபோதும் திமுகவின் தொனியில் கட்டளையிடுகிற தொனி இல்லை. அழுத்தம் தருகிற தொனி இல்லை. பரிசீலனை செய்ய வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் இதுவரை அவர்கள் பேசியிருக்கிறார்கள் தவிர, கட்டளையிடுகிற போக்கு இல்லை. அதையேதான் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

4 கட்ட பேச்சிலும் ஒரு ஜனநாயகம் இருந்தது. சுயமரியாதை பாதிக்கப்பட்டிருக்குமேயானால் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதோ கடந்து சென்றிருக்கும். முதலமைச்சருடன் அல்லது திமுக தலைமையுடன் பேசுகிறபோது ஒருபோதும் எங்களது சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுகிற வகையிலோ கட்டளையிடுகிற வகையிலோ அவர்கள் பேசவில்லை என்பதை மனந்திறந்து இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

செய்தியாளர்: மாநிலக் குழுவில் நிர்வாகிகள் சொன்னது என்ன?

மு. வீரபாண்டியன்: கம்யூனிஸ்ட் கட்சியில் ஒவ்வொரு நிர்வாகிகளும் என்ன கருத்துக்களைச் சொன்னார்கள் என்பதை சொல்வது ஏற்புடையதல்ல. ஆனால் பொதுவாக, இன்றுள்ள அரசியல் சூழலில் நமக்குரிய இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும். ஓரிரு இடங்கள் கூடுதலாகப் பெற வேண்டும் என்பதுதான் மிக நியாயம். அத்தகைய நியாயம் நம்மிடம் உண்டு. இதை நாம் பேசுவோம், இல்லை என்றால் நாம் 6 இடத்துக்காவது வலியுறுத்துவோம் என்று வலியுறுத்தினோம். ஒவ்வொரு முறையும் வந்து பேச பேச கட்சி கமிட்டி என்ன சொல்கிறதோ அதை திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் சொன்னோம். நிறைவாக முதலமைச்சர் அவர்களிடமும் நாங்கள் எடுத்துச் சொன்னோம். நிறைவாக சூழல் இல்லாதபோது அந்த சூழல் கருதி எங்கள் அரசியல் நிலையில் எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது; இது பிறருக்கு ஒரு பிரச்சாரத்திற்கு இடம் தந்து விடக்கூடாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, தோழமை பூர்வமாக நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். எனவே இது வெல்லும் கூட்டணி. அந்த வகையில் இதை கடந்து சென்றுவிட முடியாது என்கிற கருத்துதான் பேசப்பட்டது.

செய்தியாளர்: கடந்த முறை 6 தொகுதிகள் வாங்கினீங்க, 2 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றீங்க. ஒருவேளை அந்த வின்னிங் ரேஷியோ குறைந்ததால இந்த முறை உங்களது எண்ணிக்கையை குறைச்சிருக்காங்களா?

மு.வீரபாண்டியன்: இல்லை, இல்லை, அப்படியெல்லாம் இல்லை. பல கட்சி இயங்கும் முறையில் வெற்றி தோல்வி மிக இயல்பானது. எங்களை அந்த வெற்றி தோல்வியில் வைத்து எடைபோடக் கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற எண்ணிக்கை வைத்து எடைபோடக் கூடாது. எங்கள் குரலும் எங்கள் மூச்சும் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை எளியவர்களின் கோரிக்கையில் அடங்கியிருக்கிறது. அதை நிறுத்த யாருக்கும் சக்தியில்லை. அந்த குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

செய்தியாளர்: கம்யூனிஸ்ட் கட்சி, தங்களது இடத்தை விட்டுக்கொடுத்து 5 குறைச்சிருக்காங்க. ஆனா காங்கிரஸ் அதோட எண்ணிக்கையை 3 ஆக அதிகரிச்சிருக்காங்க. இன்னும் புதிய கட்சிகளுக்கு கம்யூனிஸ்டுகளை விட அதிக இடங்கள் கொடுத்திருக்காங்கன்னு சொல்லப்படுது. இந்த மாதிரியான சூழல்ல உங்களுக்கு உங்க கட்சிக்குள்ளான ஒரு அழுத்தம் இல்லையா?

மு. வீரபாண்டியன்: இல்லை, இல்லை. 4 முறை நாங்கள் பேசியிருக்கிறோம். பேசியதைத்தான் சொல்லியிருக்கிறோம். பேச்சுவார்த்தை குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை. செயலாளரான எனக்கே அதிகாரம் இல்லை. எங்கள் கட்சியில் அத்தகைய ஜனநாயகம் நிலவுகிறது. பெரிய தலைவராக இருக்கிறவர்களுக்குமே அதிகாரம் இல்லை. செயலாளர் எனக்கே அதிகாரம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில கமிட்டிக்குத்தான் அதிகாரம். எனவே கமிட்டி சொல்வதை திமுக தலைமையிடம் சொல்லி, திமுக தலைமை சொல்வதை கமிட்டியிடம் சொல்லி இவ்வளவு நாங்கள் பேசுவது என்பதே போராடுகிறோம் என்பதைக் காட்டுகிறது அல்லவா? சூழல் இடம் தரவில்லை. இதைப் பின்னடைவாகவோ இழப்பாகவோ நாங்கள் கருதவில்லை. அரசியலில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.

செய்தியாளர்: கம்யூனிஸ்ட்டுக்கு இடம் தராத சூழல் காங்கிரசுக்கு இடம் தந்துருக்காங்குற கேள்வி எழுகிறபோது…

மு.வீரபாண்டியன்: காலம் அதற்கான விடைகளைத் தரும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எதற்கும் இடறவில்லை. எங்கள் குறி பாஜகவை வீழ்த்துவது. பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கே ஒரு நல்லதோர் அரசியல் திசையைக் காட்ட வேண்டும் என்கிற வேட்கையில் நாங்கள் இருக்கிறோம்.

செய்தியாளர்: நீங்க பாஜகவை வீழ்த்துற ஒற்றை குறிக்கோளில் இருக்குறீங்க.. ஆனா திமுகவோட பிக் பிரதர் ஆட்டிடியூட்குள்ள போறீங்களா?

மு. வீரபாண்டியன்: நீங்களெல்லாம் கற்றவர்கள், அறிவில் சிறந்தவர்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைக்கிறது. நாடாளுமன்றம் என்பது என்ன? உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைத்துவிட்டது. வெறும் குரல் வாக்கெடுப்பில் கைகளை உயர்த்தி மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். உலகத்தில் ஆகச்சிறந்த இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விழுமியங்களை அடித்து நொறுக்குகிற பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் அரசியல் கடமை. அதை எளிதாகக் கடந்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஒருபோதும் ஒரு பெரிய அண்ணன் போன்று நடந்துகொள்ளவில்லை. அவ்வாறு யார் நடந்துகொண்டாலும் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்காது.

இந்தியாவிலேயே. தேசிய அளவில் மாறாத சின்னம் கதிர் அரிவாள் சின்னம்தான் எனவே அந்த சின்னம் மாறாது, அதை உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share