தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக மக்களவை எம்.பி.யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தாம் ஏன் போட்டியிடுகிறேன் என்பது குறித்து நேற்று இரவு திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அன்பார்ந்த தோழர்களே! என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே! அனைவருக்கும் வணக்கம். நடைபெறவிருக்கின்ற இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது.
இது தொடர்பாக 234 தொகுதிகளிலிருந்தும் இயக்கத் தோழர்கள் 2,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். குறிப்பாக, இந்த 8 தொகுதிகளில்:
- காட்டுமன்னார்கோவில்: 80 விருப்ப மனுக்கள்
- கள்ளக்குறிச்சி: 84 விருப்ப மனுக்கள்
- செய்யூர்: 31 விருப்ப மனுக்கள்
- அரக்கோணம்: 47 விருப்ப மனுக்கள்
- திண்டிவனம்: 54 விருப்ப மனுக்கள்
- பண்ருட்டி: 25 விருப்ப மனுக்கள்
- பெரியகுளம்: 33 விருப்ப மனுக்கள்
- திருப்போரூர்: 19 விருப்ப மனுக்கள்
- என்று தோழர்கள் ஏராளமாக விருப்ப மனுக்களை அளித்திருக்கிறார்கள்.
80 பேரில் காட்டுமன்னார்கோவிலில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோல 84-ல் ஒன்று, 39-ல் ஒன்று, 47-ல் ஒன்று, 54-ல் ஒன்று, 25-ல் ஒன்று, பெரியகுளம் 33-ல் ஒன்று, திருப்போரூர் 19-ல் ஒன்று என்று தேர்வு செய்து அறிவிக்கிற நிலையில், எஞ்சிய தோழர்கள், விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்த தோழர்கள், தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற அதிர்ச்சிக்கு ஆளாக நேரும்.
இது ஒவ்வொரு கட்சியிலும் நிலவுகிற ஒரு அரசியல்தான். எனவே, தேர்வு செய்யப்படுகிற தோழர்கள் மட்டும்தான் தகுதி பெற்றவர்கள், மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்ற பொருளில் அல்ல. ஆனால், ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்கிற நிலையில் இந்த வாய்ப்பு கிட்டாத தோழர்களுக்கு என்னுடைய ஆறுதலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனால்தான் உயர்நிலைக் குழுவிலே நான் சொன்னேன், இப்படி தேர்வு செய்யக்கூடிய ஒரு நிலை கட்சித் தலைவருக்கு இருக்கக் கூடாது. கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுவில் வேட்பாளரைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும், மாநில நிர்வாகக் குழு அதை ஆய்வு செய்ய வேண்டும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்கிற ஒரு அணுகுமுறையை, ஒரு மெக்கானிசத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் கையாண்டு வருகின்றன.
இனி வரும் காலங்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிற பொறுப்பு அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுக்கே இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன், அப்படித்தான் இனி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் நானே வேட்பாளரைத் தேர்வு செய்கிற கடைசித் தேர்தல் என்பதை வலியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தத் தேர்தலில் நாம் எதிர்கொள்ளவிருக்கிற நெருக்கடிகள், வலதுசாரிகள் இங்கே வலுப்பெற்று விடக்கூடாது என்பதுதான் பல நெருக்கடிகள் இருந்தாலும், வலதுசாரிகள், மதவாத சக்திகள் வலுப்பெற்று விடக்கூடாது என்கிற அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நாம் கைகோர்த்து களத்தில் நிற்கிறோம். பல்வேறு வருத்தங்கள் நமக்கு இருந்தாலும் கூட, அதாவது நிறைய கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற முடியவில்லை என்கிற வருத்தம், குறிப்பாக அரூர் தொகுதியைக் கேட்டுப் பெற முடியவில்லை என்கிற வருத்தம், அதற்காக நான் அரூர் தொகுதியைச் சார்ந்த தோழர்களுக்கு, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தோழர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் பல வருத்தங்கள், வலிகள் நமக்கு உண்டுதான். இதுதான் தேர்தல் அரசியல். இந்தத் தேர்தல் அரசியலை நாம் எதிர்கொண்டாக வேண்டும், நெருக்கடிகளைக் கடந்து சென்றாக வேண்டும். இன்னும் நாம் ஒரு மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதி செய்தாக வேண்டும்.
இந்தத் தேர்தல் களத்தில் நாம் களம் இறங்க இருக்கிறோம். இந்த நிலையில், ஒரு நீண்ட நெடிய உளவியல் போராட்டங்களுக்குப் பின்னர், பலரோடும் கலந்தாய்வு செய்த நிலையில், நம்முடைய கூட்டணிக் கட்சி, நம்முடைய முன்னணித் தோழர்கள், இந்தத் தொகுதியைச் சார்ந்த திமுகவின் முன்னணிப் பொறுப்பாளர்கள் என்று பலருடைய உடல் நிலையை அறிந்து, தற்போது நிலவுகிற தமிழக அரசியல் சூழலை அறிந்து, எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலை எவ்வாறு நாம் வழிநடத்த இருக்கிறோம், நம்முடைய கட்சியை எப்படி வலுப்படுத்த இருக்கிறோம் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு, நான் இந்த வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருக்கிறேன்.

வழக்கம் போல தோழர்கள், குறிப்பாக விருப்ப மனு செலுத்தி ஆர்வத்தோடு காத்திருக்கிற தோழர்களில் பலர், தங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை என்கிற வருத்தம் இருக்கும். அந்த வருத்தத்தை எண்ணி நான் வேதனையோடு, உங்கள் உணர்வுகளை மதிக்கிறவன் என்கிற அந்தப் பொறுப்புணர்வோடு இந்தப் பட்டியலை நான் முன்வைக்கிறேன்.
- திண்டிவனம் தொகுதியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு போட்டியிடுகிறார்.
- பெரியகுளம் தொகுதியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மூத்த தோழர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு போட்டியிடுகிறார்.
- அரக்கோணம் தொகுதியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எழில் கரோலின் போட்டியிடுகிறார்.
- பண்ருட்டி தொகுதியில் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாநிலச் செயலாளர் அப்துர் ரகுமான் போட்டியிடுகிறார்.
- திருப்போரூர் தொகுதியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் பன்னீர்தாஸ் போட்டியிடுகிறார்.
- கள்ளக்குறிச்சி தொகுதியில் முனைவர் வழக்கறிஞர் கு. மாலதி போட்டியிடுகிறார்.
- செய்யூர் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சிந்தனைச் செல்வன் போட்டியிடுகிறார்.
- காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கட்சியின் தலைவர் என்கிற முறையில் நான் (தொல். திருமாவளவன்) போட்டியிடுகிறேன்.
தமிழக அரசியலில், மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்தச் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோவிலில் நான் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.
பெரியகுளத்தில் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, திண்டிவனத்தில் வன்னியரசு, அரக்கோணத்தில் வழக்கறிஞர் எழில் கரோலின், பண்ருட்டியில் அப்துர் ரகுமான், திருப்போரூரில் பன்னீர்தாஸ், கள்ளக்குறிச்சியில் கு. மாலதி, செய்யூரில் சிந்தனைச் செல்வன்,
இந்த வேட்பாளர்களுக்கு இயக்கத் தோழர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்கி, அவர்களின் வெற்றிக்கு பாடாற்ற வேண்டும். எட்டுக்கு எட்டு நாம் வெற்றி பெற வேண்டும், நூற்றுக்கு நூறு நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கிற ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக நாம் மீண்டும் வலுப்பெற வேண்டும்.
கடந்த முறை வென்ற தோழர்களில் மூவருக்கு, குறிப்பாக தம்பி எஸ்.எஸ். பாலாஜி, தம்பி ஆளுநர் ஷாநவாஸ், நம்முடைய பனையூர் பாபு ஆகிய மூவருக்கும் இந்த முறை வாய்ப்பளிக்க இயலவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு இயக்கத் தோழர்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். வாய்ப்பு கிட்டாதவர்கள் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
