தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், கும்பகோணம் கலைஞர் பல்கலைக் கழகம் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக துணைவேந்தரை நியமிக்கும்/ நீக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற வகை செய்தல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் தரவில்லை.
இம்மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளார்; இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியதாவது:
- மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பளித்தது; இத்தீர்ப்பு மீது குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணை முடிவடையவில்லை.
- குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணையின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு தமிழக அரசின் வழக்கு விசாரணை குறித்து முடிவு செய்யலாம்
- என்னுடைய பதவிக் காலம் 4 வாரம்தான் இருக்கிறது; அதற்குள் வழக்கில் முடிவு தெரியும். இவ்வாறு தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் “ஓய்வு பெறுவது” பற்றிய கருத்து ஏன் முக்கியம்?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய், தாம் ஓய்வு பெற இருப்பது தொடர்பாக தமிழக அரசு வழக்கில் தெரிவித்திருக்கும் கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இது பற்றி ‘ஸ்டாலினின் முதலீடுகள்’.. ஆக்டிவ்வான ஸ்லீப்பர் செல்கள்! ‘கலகங்களை’ காலி செய்யும் இபிஎஸ்- ‘பூஸ்ட்’ ரிப்போர்ட் பின்னணி!” என்ற தலைப்பில் நமது டிஜிட்டல் திண்ணையில் செப்டம்பர் 8-ந் தேதி எழுதி இருந்தோம்.
அதில், ” தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பல்வேறு விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் ஓய்வு பெறுகிற நவம்பர் 23-ந் தேதி வரை பெரிய அளவுக்கு திமுக அரசுக்கும், ஸ்டாலின் குடும்பம் மற்றும் திமுக அமைச்சர்களுக்கு நெருக்கடி தந்து சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால், பிஆர் கவாய் ஓய்வு பெற்ற பின், சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக திமுகவுக்கு குடைச்சலைத் தொடங்கிவிடலாம்; திமுகவின் மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல.. முதல்வர் ஸ்டாலின் குடும்பம் வரை நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருக்கிறது மத்திய அரசு” என நாம் பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.