ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சதத்தால் இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியை டிரா செய்தது இந்திய அணி.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த நிலையில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மான்செஸ்டர் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது.

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது.
இதனால் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் முதல் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறியது அதிர்ச்சி அளித்தது.

எனினும் கே.எல்.ராகுல் (90) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (103) ஆகியோர் நிதானமான பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்தனர். அவர்களை தொடர்ந்து 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா (107*) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (101*) அந்த பொறுப்பை ஏற்றனர். கடைசி நாளான நேற்று இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாடி சதமடித்தனர். இதனால் 4வது போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து ஜடேஜா மற்றும் தனது முதல் சதத்தை பதிவு செய்த சுந்தரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே போட்டி முடிந்ததும் ஜடேஜாவிற்கு கை கொடுக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கைகொடுக்க மறுத்தது சர்ச்சையானது.

போட்டியில் 15 ஓவர்கள் மீதமிருந்தபோது, ஜடேஜா மற்றும் சுந்தர் இருவரும் சதத்தை நெருங்கிய வேளையில் பென் ஸ்டோக்ஸ் வந்து கைகொடுத்து ஆட்டத்தை டிரா செய்ய அழைத்துள்ளார். ஆனால் இருவரும் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இருவரும் சதமடித்து போட்டி டிராவில் முடிந்ததும், அவர்களுக்கு கைகொடுக்க மறுப்பு தெரிவித்து கடுப்பில் வெளியேறியுள்ளார் பென்ஸ்டோக்ஸ்.