கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஆனால் ஹமாஸ் பயங்கரவாத இயக்க தலைவர்களை இலக்கு வைத்தே தோஹாவில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல்- காஸா போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேலின் போர் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை கத்தார் அரசு ஆதரிக்கிறது. இதனால் கத்தார் மீதும் இஸ்ரேல் கோபத்தில் இருந்து வருகிறது.
இந்த பின்னணியில் கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் திடீரென வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சர்வதேச சட்ட விதிகளை மீறி இந்த தாக்குதல் நடத்தி உள்ளதாக கத்தார் அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இதனிடையே கத்தாரில் உள்ள அமெரிக்கா குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், தோஹாவில் ஹமாஸ் இயக்க தலைவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை தொடங்கியது; இஸ்ரேல் தாக்குதலை முடித்து வைக்கிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் முழு பொறுப்பேற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக கத்தாருடன் இணைந்து நிற்போம் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.