பாஸ்கர் செல்வராஜ்
கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும்.
அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள்.
விஜய் அரசியலின் குழப்பம்
பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை.
இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.
திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது.
வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும்

இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது.
தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது.
திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின் பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது.
கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல்
பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது.

அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள் பெரும்பாலும் பிற்போக்கு குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம்.
இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது)
இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும்.
பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள்
நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது.
1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது
2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது
3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது
ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது.
வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி.

சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி.
அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார்.

இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம்.
விஜய் அரசியலின் சாதியக் கோணம்
காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது.
எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல்
இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது.

திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது.
பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள்.
முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி
இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது.

இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது.
ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம்.