தமிழக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 26) டெல்லியில் நடைபெற உள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக தமிழக டிஜிபியாக யாரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக ஒரு பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது. அந்தப் பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பெயர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி UPSC ஆய்வு செய்யும். இந்த பட்டியலில் இருந்து 3 பேரை தமிழக அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் புதிய டிஜிபி பதவிக்கு 3 உயர் அதிகாரிகள் பெயர் பரிந்துரைக்கப்படும். இந்த 3 பேரில் ஒருவரை புதிய டிஜிபியாக தமிழக அரசு அறிவிக்கும்.