என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள டிடிவி தினகரன், ‘தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும்’ என்று கூறி எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று (ஜனவரி 21) தமிழ்நாட்டுக்கு வந்தார்.
அவரது முன்னிலையில், என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தார்
இதுவரை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம். எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று கூறி வந்த டிடிவி தினகரன், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காக என்.டி.ஏ.கூட்டணியில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.
அதேசமயம் என்.டி.ஏ கூட்டணியின் தமிழக தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ.வில் அமமுக இணையும் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதும் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் பியூஸ் கோயலும், டிடிவி தினகரனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது பியூஸ் கோயல், ‘என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் மீண்டும் இணைந்துள்ளார். 2004-2007 காலக்கட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே அவரது திறமை, பங்களிப்பை நான் பார்த்திருக்கிறேன். அன்புமணி, ஜிகே வாசன் ஆகியோரும் கூட்டணியில் இணைந்துள்ளனர். ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்’ என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், ‘பங்காளி சண்டையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம்” என்றார்.
அவரிடம் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு டிடிவி தினகரன், ‘என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களுக்குத் தெரியும். தெரிந்துகொண்டே கேட்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.
எல்லாவற்றையும் மறந்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவீர்களா? என்ற கேள்விக்கு,
“தமிழ்நாட்டு நலனையும், அமமுக நலனையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எல்லாம் மறந்துவிட்டு, முழு மனதோடு என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளேன்” என்றார் டிடிவி தினகரன்.
