கரூர் சம்பவத்தில் சிபிஐ கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தவெக சார்பில் 2 வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்று கூறி தவெகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் கரூர் துயரம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழு கடந்த 5 நாட்களாக கரூரில் தங்கி விசாரணை நடத்தி வருகிறது. நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையே சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரணைக் கோரியும் அக்கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று மதியம் 12.30 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் தவெக மற்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் யார் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாமா சேஷாத்ரி மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதாட உள்ளனர்.