ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை எழுப்பியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ’யில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அந்தப் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எட்டு முறை ஆசிய கோப்பை சாம்பியனான இந்திய அணி, செப்டம்பர் 10 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அதில் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஹார்டிக் பாண்ட்யா, சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ரியான் பராக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளனர்.
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ரூ.26.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியாக கேப்டனாக 604 ரன்களுக்கு மேல் விளாசியதுடன் 175.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சாதித்திருப்பதால், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து – இந்தியா தொடரைப் போலவே ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாமல் நிராகரித்துள்ளனர்.
அணி அறிவிப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அஜித் அகர்கர் பேசுகையில், “ஷ்ரேயாஸ் ஐயர் ஆசியா கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது அது அவருடைய தவறல்ல. அதே நேரம் எங்களுடைய தவறும் அல்ல. அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
சிறப்பான ஃபார்மில் இருந்தபோது, தொடர்ந்து ஸ்ரேயாஸை தேர்வுக்குழுவினர் நிராகரித்து வருவது அவரது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய் கூறுகையில், “
கடந்த ஆண்டில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஐபிஎல் உட்பட) ஸ்ரேயாஸ் ஐயரை விட வேறு யாரும் சிறப்பாக பேட்டிங் செய்ததில்லை. ஆனாலும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லையா? ஐயரின் முகம் யாரோ ஒருவருக்குப் பிடிக்கவில்லை போலும்!” என மறைமுகமாக கம்பீரை தாக்கியுள்ளார்.
இதுபோன்ற ரசிகர்களின் காட்டமான விமர்சனங்கள் இதோ