தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அவருக்கு பொன்விழா வாழ்த்துகள் உலகம் முழுவதும் இருந்து குவிந்து வருகின்றன.
அரசியல் தளத்தில் பிரதமர் மோடி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் ரஜினிக்கு இணையாக போற்றப்படும் நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் உலகம் முழுவதிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தமிழ் திரையுலகை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ரஜினிக்கு, கூலியின் வெற்றி அவரது பொன்விழா ஆண்டில் மணிமகுடமாய் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
எனினும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய், ரஜினியின் பொன்விழா ஆண்டில் இன்னும் வாழ்த்து சொல்லாதது திரையுலக களத்திலும், அரசியல் களத்திலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரஜினி அவரது திரையுலக பயணத்தில் 25ஆம் ஆண்டை எட்டியபோது, விஜய் சொன்ன வாழ்த்தும் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ரஜினியை ’தலைவா என’ குறிப்பிட்டுள்ள விஜய், ”திரையுலகில் நீ கால் பதித்து இது 25வது ஆண்டு.. உன்னுடைய 50வது ஆண்டு திரையுலக வாழ்க்கையிலும் இதேபோல பூச்செண்டு கொடுத்து மகிழ… இறைவனை வேண்டுகிறேன்.. பிரியமுடன் உங்கள் ரசிகன் விஜய்’ என வாழ்த்து சொல்லியிருந்தார்.

அதனைக் குறிப்பிட்டுதான், ”சொன்னபடி 50வது ஆண்டை எட்டியுள்ள ரஜினிக்கு எப்போது பூச்செண்டு கொடுப்பீர்கள்?” என விஜய்யை நோக்கி ரசிகர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது மதுரையில் நடைபெற உள்ள தனது கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த நிகழ்வுக்கு பின்னர், ரஜினியை நேரில் சந்தித்து விஜய் சொன்னபடி வாழ்த்து தெரிவிப்பார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இன்றைய தமிழ்திரையுலகில் உலகம் முழுவதும் வசூல் சக்கரவர்த்திகளாக திகழும் உச்ச நட்சத்திரமாக ரஜினி – விஜய் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் சந்திப்பு எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய் கடந்த ஆண்டு அரசியல் களத்தில் நுழைந்த பின்னர் ரஜினியை இதுவரை ஒருமுறைக் கூட நேரில் சந்திக்கவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ரஜினி – விஜய்யின் சந்திப்பு அரசியல் மட்டத்திலும் பெரும் கவனிப்பை பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.