வெறும் அடையாளச் சடங்காகச் சுருங்கிப்போன சர்வதேச ஒழுங்குமுறை, இந்த ஆண்டில் இன்னும் மோசமாகச் சிதைந்தது. ஆனாலும், சில இடங்களில் நம்பிக்கைக் கீற்றுகள் தென்படத்தான் செய்தன.
பயஸ் போஸன்
எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்:
- காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
- இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது.
- உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள்.
- ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள்.
- உக்ரைனில் ரஷ்யா தொடுத்த போர் நான்காவது ஆண்டிற்குள் நுழைகிறது.
சில நெருக்கடிகளுக்கு இங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சூடான், ஹைட்டி, காங்கோ போன்ற நாடுகளின் துயரங்களோ கவனிக்க ஆளின்றி அனாதையாக இருக்கின்றன.
சூடான் உலகக் கவனத்திலிருந்து ஏன் நழுவியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நம் ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ‘ஸ்க்ரோலிங்’ வேகத்தில், மக்களின் வலிகள் ஏதோ ஒரு புதுமையான செய்தியுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகின்றனவா? அல்லது ஆப்பிரிக்காவில் போர் நடப்பது வழக்கம்தான், அது அந்த மண்ணுக்கே உரியது என நாம் பழகிப்போன ‘இனவாத’ முன்முடிவுகள் காரணமா? அல்லது எது ‘அவசரம்’ என்பதை அதிகாரவர்க்கம் தீர்மானிக்கிறதா?

சூடான் ஏன் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல; சூடானைப் பற்றிப் பேசாததால் கிடைக்கும் அமைதியால் பலன் அடைவது யார் என்பதுதான் கேள்வி. சூடானைப் பொறுத்தவரை, அந்த அமைதிக்கான விலையைத் ‘தங்கம்’ மூலம் அளவிடலாம். இந்த மோதலில் தங்கத்தைத் தோண்டி எடுக்கும் ஆசையில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், அங்கிருக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு (RSF) ஆயுதங்களை வழங்கியதை ஐக்கிய நாடுகள் சபையே ஆவணப்படுத்தியுள்ளது.
தாறுமாறாகிப்போன சர்வதேச ஒழுங்குமுறை
வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறியிருந்த சர்வதேச ஒழுங்குமுறை, 2025இல் இன்னும் மோசமாக உடைந்துபோனது. அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு அதிகாரத்தைச் செலுத்தியது; தான் உருவாக்கிய உலகளாவிய விதிமுறைகளைத் தனது தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டது.

இஸ்ரேல் மீதான விசாரணையைத் தொடர்ந்ததற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீதே அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் புலனாய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அதிகாரி ஃபிரான்செஸ்கா அல்பனீஸுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. வெறுப்புப் பேச்சுகளைக் கேள்வி கேட்டதற்காகவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைத்ததற்காகவும் ஐரோப்பியச் சமூகத் தலைவர்கள் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், கேள்விக்குரிய சூழலில் நாடுகடத்தப்பட்டும் வருகின்றனர்.
இங்கே தர்க்கமும் தண்டனை கொடுப்பவரும் ஒருவர்தான்; ஆனால் கூச்சல் மட்டும் சில இடங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் ஆள் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கதறினார்கள். ஆனால், தாங்களே உருவாக்கிய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இஸ்ரேலைத் தண்டித்ததற்காகத் தடை விதிக்கப்பட்டபோது மௌனம் காத்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று (Optional). பொறுப்புக்கூறல் என்பது நிபந்தனை. யாருக்கு வலி ஏற்படுகிறது, யாரால் வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுகிறது.
சர்வதேச ஒழுங்கும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே ஒருபோதும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. 2025இல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றும் புதிதாக எதையும் உடைத்துவிடவில்லை; இந்தத் தறிகெட்ட அமைப்பு இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். இந்த அமைப்பு நடுநிலையானது அல்ல; இது அதிகாரத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. அதன் போலித்தனத்தை இனி யாராலும் மறைக்க முடியாது.
பலவீனமாகிவரும் ஜனநாயகம்
ஜனநாயகமும் சுதந்திரமும் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பத்தில் ஒருவருக்குக்கூட இப்போது முழுமையான ஜனநாயகம் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 72% பேர் சர்வாதிகார அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இது 1970களுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். மக்கள் பங்களிப்பு சுருங்கிவிட்டது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது.

தொழில்நுட்ப ஜாம்பவான் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (Trillionaire) ஆகும் நிலையை நெருங்கிவிட்டார். இந்த ஓராண்டுக் காலத்தில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஊடகம், பாதுகாப்புத் துறை, செயற்கைக்கோள் கட்டமைப்பு என அவரது ஆதிக்கம், தனிநபர் மூலதனத்திற்கும் பொது அதிகாரத்திற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்துவிட்டது. அறிஞர்கள் இதை ஒருவகை ‘தனியார் ஆட்சி’ (Private Governance) என்றே விவரிக்கிறார்கள். அவரது பணமும் தளங்களும் உலகெங்கிலும் ஒரு புதிய நவீன சர்வாதிகாரத்தை வடிவமைத்துச் சீரமைக்கின்றன.
இந்தச் சீர்குலைந்த பொருளாதார அமைப்பால் பலன் அடைந்தவர் எலான் மஸ்க் மட்டும் அல்ல. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இன்படி, முதல் 10% வருமானத்தை ஈட்டுபவர்கள் மீதமுள்ள 90% பேர் பெறும் மொத்த வருமானத்தைவிட அதிகமாகப் பெறுகிறார்கள். உலகச் செல்வத்தில் 75%-ஐ அந்த முதல் 10% பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களுக்கோ வெறும் 2% மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம், உலகளாவிய தொழிலாளர்களின் ஊதியமோ தேக்கமடைந்து அல்லது சரிந்துவருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அளவிலான சமத்துவமின்மை மிகவும் அசாதாரணமானது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இந்த அழுத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் நாட்டின் 40% செல்வத்தைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவை உலகின் மிக மோசமான சமத்துவமின்மை கொண்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தைவிடவும் மோசமானது.
ஒரு துளி நம்பிக்கை எஞ்சியிருக்கிறது…
நேபாளம், வங்கதேசம் முதல் பல்கேரியா, ஜார்ஜியா, மடகாஸ்கர்வரை போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் அரசியலின் தற்போதைய நிலையைத் தகர்த்துவருகின்றனர். அரசாங்கங்கள் கவிழ்ந்தன, புதிய அரசியல் கட்டமைப்புகள் வடிவம் பெறுகின்றன. ஜார்ஜியா இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியது; இளைஞர்கள் அடக்குமுறையை மீறி வீதிகளில் உறுதியாக நிற்கிறார்கள்.

அமெரிக்காவில், ஜோஹ்ரான் மம்தானி போன்ற சோஷலிசவாதிகள், காஸா விவகாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மாற்றிக்கொள்ளாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் காட்டினார்கள். இன்றைக்கும் கொள்கை அரசியலுக்கு இடமுண்டு என்பதற்கான சான்று இது. நியூ யார்க் மேயர் தேர்தலில் வென்றபோது ஜோஹ்ரான் மம்தானி தன் மொழியையோ அல்லது வாக்குறுதிகளையோ ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை.
2025இல் பெண்களின் உறுதியும் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் பெண்கள் ஒன்றுதிரண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது புவியியல் சார்ந்த விஷயம் அல்ல, அது தனிநபர் உரிமை என்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரிக்கச் செய்தனர். இது விவாதத்தின் போக்கை அறநெறியிலிருந்து ‘உரிமை’ நோக்கி மாற்றியது.
ஆற்றல் துறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. முதல் முறையாக நிலக்கரி மின்நிலையங்களை விடவும் காற்று, சூரிய ஒளி ஆகியவை மூலம் அதிக மின்சாரம் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது உலக மின்சார அமைப்பில் ஒரு பெரும் திருப்புமுனை.
நெறிமுறைகள் எவ்வளவு எளிதாகச் சிதைக்கப்படும் என்பதை இந்த ஆண்டு காட்டியது. அதே சமயம், மக்கள் திரண்டு அழுத்தம் கொடுத்தால் அதிகாரம் எப்படிப் பணியும் என்பதையும் காட்டியிருக்கிறது. இந்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஒரு நிலையான கட்டமைப்பாக மாறப்போகின்றன என்பதைப் பொறுத்தே வருங்காலம் அமையும்.
கட்டுரையாளர்:
பயஸ் போஸன், ஒளிப்பட ஊடகவியலாளர்; டாய்ச் வெல்லே அகாடமியில் (Deutsche Welle Akademie) சர்வதேச ஊடக ஆய்வியல் அறிஞர்.
