மக்களிடையே இப்போது SUV கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. அதிலும் ஹூண்டாய் கிரெட்டா கார் இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் ஸ்டைல், அம்சங்கள் மற்றும் சௌகரியம் ஆகியவை நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே இதை மிகவும் பிடித்தமான காராக ஆக்கியுள்ளன. கிரெட்டா (Hyundai Creta) என்பது வெறும் கார் மட்டுமல்ல; அது ஒரு அந்தஸ்தின் சின்னமாகவும் மாறிவிட்டது. ஆனால், அந்தக் காரை வாங்குவதற்கு உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும்? மாதாந்திர EMI எவ்வளவு இருக்கும்? என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
Hyundai Creta காரின் விலை எவ்வளவு?
இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா காரின் விலை சுமார் ரூ. 10.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கி, டாப்-ஸ்பெக் மாடலுக்கு ரூ. 20.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. அதிகம் விற்பனையாகும் பேஸ் அல்லது மிட்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு (S அல்லது SX), ஆன்-ரோடு விலை (காப்பீடு, RTO மற்றும் பிற வரிகள் உட்பட) சுமார் ரூ. 13.50 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்?
பெரும்பாலான வங்கிகள் காரின் ஆன்-ரோடு விலையில் 80% முதல் 90% வரை கடன் வழங்குகின்றன. நீங்கள் ரூ. 15 லட்சம் விலையுள்ள ஒரு கிரெட்டா காரைத் தேர்ந்தெடுத்தால், சுமார் ரூ. 3 லட்சம் என 20% முன்பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ. 12 லட்சத்தை வங்கியிலிருந்து கடனாகப் பெற வேண்டும்.
மாத EMI கணக்கீடு:
வங்கி உங்களுக்கு 9% வட்டி வசூலித்து நீங்கள் 4 ஆண்டுகளுக்கு (48 மாதங்கள்) கடன் வாங்கினால், உங்கள் மாதாந்திரத் தவணை சுமார் ரூ. 29,862 ஆக இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் வங்கிக்கு வட்டியாக மட்டும் சுமார் ரூ. 2.33 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?
நிதி நிபுணர்களின் 20/4/10 விதியின்படி, கார் EMI உங்கள் கையில் கிடைக்கும் மாதாந்திரச் சம்பளத்தில் 10% முதல் 15%ஐத் தாண்டக்கூடாது என்கின்றனர். ரூ. 30,000 மாதாந்திர EMIக்கு, உங்கள் கையில் கிடைக்கும் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் சம்பளம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.25 லட்சம் வரை இருந்தால் EMI சுமையைக் குறைக்க உங்கள் முன்பணத்தை ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.
இந்த விஷயங்கள் முக்கியம்:
EMIஐத் தவிர, பெட்ரோல்/டீசல் மற்றும் சர்வீசிங்கிற்காக ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ. 5000 முதல் ரூ. 8000 செலவாகும். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ரூ. 30,000 முதல் ரூ. 50,000 என்ற பெரிய காப்பீட்டு பிரீமியத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் நீங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இது உங்கள் EMI சுமையைக் குறைக்கும்.
