இந்த வார இறுதியை சுவாரஸ்யமான தமிழ்ப் படங்களுடன் செலவிடும் வகையில் குடும்ப டிராமா, கிரைம் த்ரில்லர், ஃபேன்டஸி என பல ஜானர்களில் இந்த வாரம் ஓடிடிகளில் படம் வெளியாகியுள்ளது.
என்னென்ன படங்கள்?
தனுஷ் இயக்கத்தில் “இட்லி கடை”

நடிகர், இயக்குநர் தனுஷ் எழுதி, இயக்கி, நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 29, 2025 அன்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது. கிராமிய வாழ்க்கையின் எதார்த்தத்தையும், குடும்ப உறவுகளின் ஆழத்தையும் அழகாகச் சித்தரிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் அக்டோபர் 1 அன்று வெளியான இத்திரைப்படம், OTT தளத்திலும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா சாப்டர் 1”

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தின் ப்ரீகுவலான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம், அக்டோபர் 31, 2025 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் இப்படம், கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. பஞ்சுருளி தெய்வம் மற்றும் குலிகாவின் புராணக்கதைகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பழங்குடியின மக்களுக்கும், கொடுங்கோல் மன்னனுக்கும் இடையேயான போராட்டத்தை பதிவு செய்கிறது.
மலையாள சூப்பர் ஹீரோ படம் “லோகா சாப்டர் 1: சந்திரா”

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான மலையாள சூப்பர் ஹீரோ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, அக்டோபர் 31, 2025 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கேரள நாட்டுப்புறக் கதைகளையும், சூப்பர் ஹீரோ சாகசங்களையும் கலந்து கொடுத்திருக்கிறது. ஒரு மர்மமான இளம் பெண் சந்திராவின் அமானுஷ்ய திறன்களும், அவர் ஒரு கிரிமினல் உலகத்தில் சிக்கும் திருப்பங்களும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி உலகளவில் ரூ.300 கோடி வசூலித்த இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கிறது.
ஜி.வி. பிரகாஷின் “பிளாக்மெயில்”

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘பிளாக்மெயில்’ என்ற கிரைம் த்ரில்லர் திரைப்படம் அக்டோபர் 30, 2025 அன்று சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய OTT தளங்களில் வெளியானது. பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பிணைந்துள்ள பொய்கள், ஏமாற்றங்கள், பேராசை ஆகியவற்றை ஆழமாகச் சுழல்கிறது இக்கதை.
