உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக பிரதமர் மோடி அலுவலகத்தின் தமிழ் செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் அதிபர் திரு ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் திரு மோடி பேச்சு” என குறிப்பிடப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் அலுவலகத்தின் தமிழ் செய்திக் குறிப்பை PIB இணையதளம் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி மாலை 6:39 மணிக்கு பதிவேற்றம் செய்தது. (https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2155309)
இந்த செய்திக் குறிப்பின் தலைப்பில், “இஸ்ரேல் அதிபர் திரு ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் திரு மோடி பேச்சு” என குறிப்பிடப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என குறிப்பிடுவதற்கு பதிலாக இஸ்ரேல் அதிபர் என பிழையாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் திரு. வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதிபர் திரு ஜெலென்ஸ்கி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் திரு. ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்ததோடு, மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய-உக்ரைன் இருதரப்பு கூட்டாண்மையின் முன்னேற்றத்தையும் தலைவர்கள் மதிப்பாய்வு செய்தனர் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். அவர்கள் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி அலுவலக தமிழ் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.