திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல் கரூர் எஸ்ஐடிஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக திமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசரிக்க ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இந்த உத்தரவிற்கு எதிராக தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சிறப்பு புலனாய்வு குழுவிற்க்கு தடைவிதித்து வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை குழு அலுவலகத்திற்கு அருகே, காகிதங்கள் மற்றும் ஒரு 32 ஜிபி பென்டிரைவ் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதாரங்களை அழிக்க நடந்த முயற்சியாக இருக்கலாம் எனவும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
- விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யார்?
- பென்டிரைவைக் கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?
- அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது ஏன்?
- உச்ச நீதிமன்றமோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறதா?
- விசாரணை முடியும் முன்னரே சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்ச கருத்துகளை ஆர்வமாகத் தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது எதனை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்குத் திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டசபை வளாகத்தில் வைத்தே அமைச்சர்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது என இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், உண்மை என்றும் உறங்காது! தமிழக பாஜக
உறங்கவும் விடாது!
எனவே, வழக்கம் போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல் ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக திமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.