வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால் அவருக்கு கடன் வழங்கிய வங்கி உடனடியாக சொத்தை பறிமுதல் செய்யாது. முதலில் இணை விண்ணப்பதாரர், பின்னர் பொறுப்பேற்பவர் (guarantor), அதன் பிறகு சட்டப்பூர்வ வாரிசுகள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளும். இவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் மட்டுமே வங்கி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு சொத்தை ஏலம் விட்டு கடனை வசூலிக்கும். ஒருவேளை கடன் பாதுகாப்பு காப்பீடு எடுத்திருந்தால், காப்பீட்டு நிறுவனம் கடனை முழுமையாகச் செலுத்திவிடும்.
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் வங்கி உடனடியாக அவரது வீட்டையோ அல்லது சொத்தையோ குடும்பத்தினரிடமிருந்து பறிமுதல் செய்யாது. முதலில், வங்கிகள் வீட்டுக் கடனுக்கு இணை விண்ணப்பதாரராக (co-applicant) இருப்பவரைத் தொடர்பு கொள்ளும். பெரும்பாலான வீட்டுக் கடன்கள் மற்றும் கூட்டு கடன்களில் இணை விண்ணப்பதாரர் ஒருவர் இருப்பார். அவரும் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை பகிர்ந்து கொள்வார்.
இணை விண்ணப்பதாரரால் மாதத் தவணைகளை (EMI) செலுத்த முடியவில்லை என்றால், வங்கி அடுத்ததாக பொறுப்பேற்பவரை (guarantor) தொடர்பு கொள்ளும். கடன் ஆவணங்களில் தேவைப்பட்டால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாக பொறுப்பேற்பவர் ஒப்புக்கொண்டிருப்பார். எனவே, இந்தச் சூழ்நிலையில் பொறுப்பேற்பவரிடம் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தும்படி வங்கி கேட்கும்.
இணை விண்ணப்பதாரரும், பொறுப்பேற்பவரும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வங்கி இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளைத் தொடர்பு கொள்ளும். இவர்களில் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் ஆகியோர் அடங்குவர். இருப்பினும், சட்டப்படி, வாரிசுகளுக்கு நேரடியாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு இருக்காது. இணை விண்ணப்பதாரர், பொறுப்பேற்பவர் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகள் யாரும் கடனைச் செலுத்த முடியாத சூழ்நிலையில், வங்கிக்கு அந்தச் சொத்தைப் பறிமுதல் செய்யும் உரிமை உண்டு. வீட்டுக் கடன் என்றால் அந்த வீடு, வாகனக் கடன் என்றால் அந்த வாகனம், மற்ற கடன்கள் என்றால் இறந்தவரின் பிற சொத்துக்கள் ஏலம் விடப்படும்.
வங்கியில் இருந்து முதலில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும். பணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்படும். அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து, மற்ற எல்லா வழிகளையும் முயற்சித்தும், பணம் செலுத்தப்படாவிட்டால் மட்டுமே வங்கி சொத்தைப் பறிமுதல் செய்து ஏலம் விடும். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை வாரிசுகளுக்குத் திருப்பி அளிக்கப்படும்.
எனவே, சொத்தை ஏற்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கடன் பாதுகாப்பு காப்பீடு என்பது ஒரு முக்கியமான விஷயம். இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். கடன் வாங்கும்போதே இதுபற்றி வங்கியில் விசாரித்து, காப்பீடு எடுப்பது நல்லது. இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
