ராமதாஸுக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி பேட்டி அளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியிருக்கும் நிலையில் சமீப நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் ராமதாஸ். இருவரையும் இணைத்து வைக்க ராமதாஸ் குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளிலும் முயன்று வந்தனர்.
இந்தநிலையில் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் இன்று (அக்டோபர் 6) அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அன்புமணி, தந்தை ராமதாஸின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘இன்று காலை கார்டியோ ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இதய ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என தெரியவந்தது. ஐயாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இதய மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மருத்துவமனையில் அவர் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும்.
தற்போது ஐசியுவில் உள்ளார். தொடர்ந்து 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார். அதனால் அவரை பார்க்க முடியவில்லை. 2 நாள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“100% ஆரோக்கியத்தோடு இளைஞரைப் போன்ற சுறுசுறுப்போடு 2026 தேர்தலை ராமதாஸ் சந்திப்பார்” என்று ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ. அருள் பேட்டி அளித்துள்ளார்.
ராமதாஸுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.