ADVERTISEMENT

இண்டிகோவுக்கு என்னாச்சு? : டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Published On:

| By Kavi

இந்தியாவில் இண்டிகோ விமான சேவை நான்காவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான வருகை புறப்பாடு தாமதம் மற்றும் ரத்து காரணமாக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. குறிப்பாக உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோவின் பங்கு அளப்பறியது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளை இண்டிகோ விமானம் கையாளுகிறது.

ADVERTISEMENT

இந்தசூழலில் கடந்த நான்கு நாட்களாக இண்டிகோ நிறுவனத்தின் சேவையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று மெட்ரோ விமான நிலையங்களான சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களில் அதன் செயல்திறன் 8.5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இன்று 400 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அங்கிருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகிறது.

ADVERTISEMENT

விமான தாமதங்கள்/ரத்துகளுக்கு என்ன காரணம்?

இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகள், சிறு தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலத்துடன் தொடர்புடைய கால அட்டவணை மாற்றங்கள், சாதகமற்ற வானிலை நிலைகள், விமானப் போக்குவரத்து அமைப்பில் அதிகரித்த நெரிசல், புதுப்பிக்கப்பட்ட விமான ஊழியர் பட்டியல் விதிமுறைகளின் (FDTL) அமலாக்கம் ஆகியவை காரணம் என்று கூறுகிறது.

ADVERTISEMENT

அதாவது, விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக பைலட்டுகளுக்கு தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய, கடுமையான விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை (FDTL) பின்பற்றுவதற்கு ஏற்ப போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை. இதுவே இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

விமானிகளின் சோர்வை குறைத்து பயண பாதுகாப்பை உறுதி செய்வதற்காக FDTL எனப்படும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன .

அதன்படி விமானிகள் மற்றும் விமான பணியாளர்களின் வாராந்திர ஓய்வு நேரம் 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் இரவு நேர விமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இரவு பயண எண்ணிக்கையும் ஒரு சுழற்சிக்கு ஆறு என்பதிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விதிமுறைகளை விமான நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று விமான போக்குவரத்து ஆணையகரமான டிஜிசிஏ கூறியது.

எனவே அதிகளவிலான விமானங்களை கையாளும் இண்டிகோவால், இந்த விதிமுறைகளின் படி போதிய விமானிகளையும், பணியாளர்களையும் பணியமர்த்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதுவே விமான சேவையை பாதிக்கும் அளவுக்கு நிலையமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் நிலை என்ன?

விமான நிலையத்தில் உள்ள டிஸ்ப்ளேக்களில் பெரும்பாலும் ரத்து என்ற அறிவிப்பையே காணப்படுகிறது. பலர் நேற்று முதல் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கின்றனர். விமான நிலையத்துக்குள் உணவு, தண்ணீர் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

சபரிமலைக்கு செல்வதற்காக டிக்கெட் புக் செய்திருந்தவர்களும், கோயிலுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

எப்போது பிரச்சினை சரியாகும்?

விமான நிறுவனம் வியாழக்கிழமை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் டிஜிசிஏ தலைவரிடம், விமான இடையூறுகளைக் குறைக்க டிசம்பர் 8 முதல் விமானங்களின் எண்ணிக்கையை குறைப்பதாகவும், தாமதங்கள் மற்றும் ரத்து செய்தல்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குத் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறது.

மன்னிப்பு கேட்ட இண்டிகோ

விமான சேவை குளறுபடியால் பாதிக்கப்பட்ட எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

விமான சேவையின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பொருட்டு  MOCA, DGCA, BCAS, AAI மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களின் ஆதரவுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பயணிகளுக்கும் தங்களுடைய டிக்கெட் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். மேலும் டிசம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்டதற்கும், வேறு நாளில் மாற்றியதற்கும் எந்தவித கட்டணமும் விதிக்கப்படாமல் முழு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் 1200க்கும் அதிகமான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share