பாமகவின் பாட்டாளி சமூக ஊடக பேரவை ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 60 நிர்வாகிகள் பங்கேற்றனர். அதோடு நீண்ட நாட்களுக்கு முன்னர் தொடங்கி, செயல்படாமல் இருந்த ’அரசியல் பயிற்சி பட்டறை’ நேற்று முதல் தொடங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி சமூக ஊடக பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார், ”அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீஸ் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் செப்டம்பர் 1ஆம் தேதி மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி ஆலோசிக்க உள்ளது“ என பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்படி ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் இன்று (செப்டம்பர் 1) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் கெளரவ தலைவரான ஜி.கே. மணி, உடல்நிலை காரணம் காட்டி கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.
எனினும் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களான சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், முன்னாள் வந்தவாசி எம்.பி துரை, நிர்வாக குழு உறுப்பினர் ஆசிரியர் நெடுங்கீரன், தலைமை கழக செயலாளர் அன்பழகன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், ஆசிரியர் பரந்தாமன், மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சேலம் ஸ்டீல் சதாசிவம் மற்றும் மாநில துணை தலைவர் திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
பாமக கட்சி விதிகளை முறைகளை மீறியாக கூறி அன்புமணி ராமதாஸுக்கு 16 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதுவரை விளக்கம் தரவில்லை.
எனவே அவர் மீது பாமக நிர்வாக குழு கூட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிர்வாகக்குழு உறுப்பினர்களோ, ’தபால் மூலம் அன்புமணியின் பதில் பெறப்படுவதால் காலதாமதம் ஆகலாம். எனவே இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்’ என பரிந்துரைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், ’நடவடிக்கை குறித்து 2 நாள் கழித்து செப்டம்பர் 3ஆம் தேதி பேசுவோம்’ எனத் தெரிவித்தார்.
வாரந்தோறும் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களை தைலாபுரத்தில் ராமதாஸ் சந்திப்பது வழக்கம். எனவே வரும் 4ஆம் தேதி அன்புமணி மீதான நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படுமா என கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.