“ஒரு விஷயத்தை மறைக்க விரும்பவில்லை” : எந்த முதல்வரும் சந்திக்காத நெருக்கடி – ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

2026ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான இன்று (ஜனவரி 24) முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றினார்.

புதிய அறிவிப்புகளை வெளியிட்டும், இதுவரை திமுக அரசு செய்த திட்டங்கள் குறித்தும் பேசினார். \

ADVERTISEMENT

மகிழ்ச்சியும் கவலையும்

அப்போது அவர், “2021ல் திமுக ஆட்சி அமைந்து பொறுப்பேற்ற போது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்குக் கவலையும் இருந்தது, அதை நான் மறைக்க விரும்பவில்லை.  இந்தப் பொறுப்பை நான் எப்படிச் செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் இருந்தது.

ADVERTISEMENT

முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது.  அதை சரி செய்தாக வேண்டும். அடுத்து, நமக்கு மேலிருக்கக்கூடிய ஒன்றிய அரசு அது ஒத்துழைக்காத, ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள். இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன்” என்று குறிப்பிட்டார்.

“ஆனால்  இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன்.  திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது.

ADVERTISEMENT

அடுத்து, இன்னும் பெருமையுடன், கான்ஃபிடன்டா சொல்கிறேன். நாங்கள் அமைக்கப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்” என்றும் கூறினார்.

யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடி

தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை முதல் தற்போது பொங்கலுக்கு ரேஷன் கார்டுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கியது வரை திமுக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், ”கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியாது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச வேண்டிய நான், ஆளுநருக்கு விளக்கம் அளித்து பேசும் நிலையில் இருக்கிறேன். இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி ஆகும். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படி இல்லை.

ஆனால், தமிழ்நாட்டினுடைய நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகப் பாடுபடும் நமக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதுதான் வேதனையா இருக்கிறது. ஆளுநர் , தான் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர் வகிக்கின்ற பதவியை, அவரே அவமானப்படுத்துகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு  கேவலப்படுத்துற செயலாக இருக்கிறது. அதிலேயும், கடந்த மூன்று ஆண்டுகளாக நம்முடைய ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது, மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்தப் பேரவை கருத வேண்டியுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டது, அரசு முறை பயணம் மேற்கொண்டது குறித்து பேசிய அவர், “ திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1,724 நாட்கள் ஆகின்றன. இதுவரை 8,655-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். பிற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். 71 முறை மாவட்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 44 லட்சத்து 44 ஆயிரத்தி 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். மக்களுக்காக நான் செய்த அனைத்தும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

“எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன்.  நாங்கள்தான் மீண்டும் வருவோம்.  நாங்கள்தான் மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வருவோம். மீண்டும் வெல்வோம்.  மீண்டும் மீண்டும் வெல்வோம்” என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share