கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு தேவையான விளக்கத்தைக் கொடுத்துள்ளோம் என்று தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணைப் பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து டெல்லி சிபிஐ வளாகத்தில் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நான் மற்றும் மதியழகனுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜரானோம்.
சிபிஐக்கு என்ன என்ன விளக்கங்கள் தேவையோ அதை நாங்கள் கொடுத்துள்ளோம். கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? எதனால் நடந்தது என்பது உலகத்துக்கே தெரியும். இதற்கு மிகப் பெரிய சாட்சியமாக ஊடகங்கள், நேரில் பார்த்த பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆகையால் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சிபிஐக்கு தேவையான விளக்கத்தை கொடுத்தோம். சிபிஐ அதிகாரிகளுக்கு இன்னமும் விளக்கம் தேவைப்பட்டதால் நாளையும் வர சொல்லி இருக்கின்றனர். நாளையும் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறோம்.
சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகள் குறித்து ஊடகங்களிடமோ, பொதுவெளியிலோ பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்காது. சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன என்ன விஷயங்களில் விளக்கம் தேவைப்பட்டதோ அனைத்து விளக்கங்களையும் கொடுத்தோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
