அமெரிக்க துணை அதிபர் என்னுடன் பேச ஒரு மணி நேரம் முயற்சி செய்தார் என்று பிரதமர் மோடி மக்களவையில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த இரு நாட்களாக ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்று (ஜூலை 29) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தனர்.
திமுக எம்.பி. கனிமொழி, “கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தீர்கள்… ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்
ஆ.ராசா எம்.பி., பேசும் போது, “பாகிஸ்தான் இந்தியாவை தாக்க போகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்திருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சொன்னார். அதைத்தான் கேட்கிறேன்” என்றார்.
இந்தநிலையில் மக்களவையில் இன்று மாலை முதல் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார்.
பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போர் நிறுத்தத்துக்கு நான் தான் காரணம் என்று டிரம்ப் 25 முறைக்கும் மேல் சொல்லியிருப்பது பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த மோடி, “இந்தியாவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. உலகின் எந்த நாட்டு தலைவரும் ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு கூறவில்லை” என்று கூறியபோது எதிர்க்கட்சிகள் ‘டிரம்ப்… டிரம்ப்…’ என கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய மோடி, “மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை அதிபர் என்னுடன் பேச முயன்றார். இதற்காக அவர் ஒரு மணி நேரம் முயற்சித்தார். ஆனால் நான் ராணுவத்துடன் ஆலோசனை செய்து கொண்டிருந்ததால் அவரது அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர், நான் அவரைத் திரும்ப அழைத்தேன். பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் தொலைபேசியில் என்னிடம் கூறினார். பாகிஸ்தானுக்கு அப்படியொரு நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும் என்று நான் பதிலளித்தேன்” என்றார்.
ராணுவத்திற்கு சுதந்திரம் மறுக்கப்பட்டது. படைகள் கைகளை மத்திய அரசு கட்டிப்போட்டுவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில், ‘எங்கே, எப்போது, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவத்துக்கு முழு சுந்தந்திரம் அளிக்கப்பட்டது” என்று பதிலளித்தார் மோடி.
அதேபோன்று டிரம்ப் பொய்யர் என்று சொல்ல மோடிக்கு தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் ராகுல் காந்தி. ஆனால் மோடி தனது உரையில், டிரம்ப்பின் பெயரை கூட குறிப்பிடவில்லை.
2019ல் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலின் போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டது குறித்து பேசிய மோடி, ‘அப்போது காங்கிரஸ் அபிநந்தனை மோடியால் திரும்ப அழைத்து வர முடியுமா. என்ன செய்கிறார் பார்ப்போம் என்று எதிர்க்கட்சியினர் கிசுகிசுத்தனர். ஆனால் அபிநந்தன் பெருமையுடனும் கண்ணியத்துடனும் திரும்பினார். இதை பார்த்து எதிர்க்கட்சியினர் வாயை மூடிக்கொண்டனர். இதை நான் இங்கு சத்தமாக சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளராகவே காங்கிர்ஸ் மாறிவிட்டது என்றும் காங்கிரஸை கண்டு நாடே சிரிக்கிறது என்றும் மோடி விமர்சித்தார்.