திரைப்படங்களுக்கான தணிக்கை நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ரகசியமானவை என்று மத்திய தணிக்கை வாரியத்தின் சென்னை அதிகாரி டி. பாலமுரளி கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னரே பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
அதோடு சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து, மீண்டும் தனி நீதிபதி ஆஷா இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அப்போது தணிக்கை வாரியம் பதிலளிக்க போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் இதுவரை தனி நீதிபதி முன் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
இந்தசூழலில் மத்திய தணிக்கை வாரியத்தின் சென்னை அதிகாரி டி. பாலமுரளி தி இந்து ஆங்கில நாளிதழிடம் கூறுகையில், “என்னிடம் எந்தத் தகவலும் இல்லை. என்னிடம் தகவல் இருந்தால்கூட, அதை என்னால் வெளிப்படுத்த முடியாது.
எங்களது தணிக்கை நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ரகசியமானவை. படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படும் வரை எங்களால் எதையும் தெரிவிக்க முடியாது.
இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்குச் சட்டத்தில் அனுமதியில்லை. படத்திற்குச் சான்றிதழ் கிடைத்த பிறகுதான் பொதுமக்களுக்கு அது தெரியவரும்.
எங்களது இணையதளம் வாயிலாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜய்யின் சர்கார் மற்றும் மெர்சல் போன்ற படங்கள் அரசியல் கருத்துக்களுக்காக சர்ச்சைகளை சந்தித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
