ADVERTISEMENT

“என்னை மன்னிச்சுடுங்க.. நேரில் வரலைன்னு கோபமா?”.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் பேசியது என்ன?

Published On:

| By Mathi

Karur Vijay Mamallapuram

‘தம்மால் கரூருக்கு நேரில் வர இயலவில்லை.. அதனால உங்களுக்கு கோபமா.. என்னை மன்னிச்சுடுங்க’ என நடிகர் விஜய் தங்களிடம் தெரிவித்ததாக கரூரில் பலியான குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கரூரில் விஜய் நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த 41 பேரில் 37 பேரின் குடும்பத்தினரை நடிகர் விஜய், சென்னையை அடுத்த மாமல்லபுரத்துக்கு நேற்று (அக்டோபர் 27) வரவழைத்து ‘ஆறுதல் பெறுதல்’ நிகழ்வை நடத்தினார்.

ADVERTISEMENT

நடிகர் விஜய்யை சந்தித்தது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உயிரிழந்த சங்கர் கணேஷ், தாமரைக் கண்ணன் குடும்பத்தினர் நமது மின்னம்பலத்திடம் கூறியதாவது:

விஜய்யை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை இரவே மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்பட்டோம். எங்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ADVERTISEMENT

விஜய் எங்களை காலையிலேயே சந்தித்தார். ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித் தனியாக அழைத்து பேசினார்.

நாங்க அவர் ரூமுக்குள் போகும்போதே கண்ணீருடன்தான் உட்கார்ந்திருந்தார் விஜய். அதனால் எங்களுக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை.

ADVERTISEMENT

விஜய் கண்ணீருடன், “உங்க குடும்பத்துல இழப்பு ஏற்பட்டதுக்காக என்னை மன்னிச்சுடுங்க..” என்று சொன்னார்.

நாங்க பதிலுக்கு பேசுவதற்குள்ளாகவே, “நான் உங்க வீட்டுக்கு நேரில் வரலைன்னு உங்களுக்கு கோபமாக இருக்கா?” எனவும் கேட்டார்

அதற்கு, “நீங்க என்ன செய்வீங்க சார்.. உங்களுக்கு பர்மிஷன் தரலைன்னு சொல்றீங்க.. பர்மிஷன் கிடைச்சிருந்தா வந்திருப்பீங்கன்னு” என நாங்கள் பதில் சொன்னோம்.

பின்னர், “உங்க குடும்பத்துக்கு என்ன என்ன தேவைன்னு வெளிப்படையாக சொல்லுங்க” என கேட்டார்.

அப்போது, “எங்க மருமகள்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கனும்” என கோரிக்கை வைத்தோம்.

அதற்கு, “நிச்சயமாக செஞ்சு தரேன்.. எதுக்கும் கவலைப்படாதீங்க.. மருமகள்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன்.. கடைசிவரை நான் பாதுகாப்பாக இருப்பேன்.. உங்க குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தர் பேருலயும் ரூ.5 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் போட்டிருக்கேன்.. அதையும் வாங்கிக்கங்க.. பிள்ளைகளோட படிப்பு செலவு எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.. அதே மாதிரி மாதம் ரூ5,000 உங்களுக்கு 20 வருஷம் கிடைக்கிற மாதிரியும் ஏற்பாடு செஞ்சிருக்கேன்..” எனவும் விஜய் சொன்னார்.

நாங்க ஒவ்வொரு குடும்பமும் 25 நிமிஷம் வரைக்கும் விஜய் கிட்ட பேசியிருப்போம்.. இந்த மீட்டிங் முடிஞ்ச உடனே எங்களை சொந்த ஊரிலேயே கொண்டு வந்து இறக்கிவிட்டுட்டாங்க”.. இவ்வாறு விஜய்யை சந்தித்த சங்கர் கணேஷ், தாமரைக்கண்ணன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share