வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
வார இறுதி நாட்களில் சென்னை உட்பட வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதுபோன்று பலரும் சுற்றுலா செல்வார்கள்.
இதனால் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் நள்ளிரவு வரை பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை வார இறுதி நாட்களில் இயக்குகிறது.
அதன்படி இந்த வாரமும் 1000க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் இன்று (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிவிப்பில், “12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை – முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும். 13/09/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும், 13/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,230 பயணிகளும் சனிக்கிழமை 3,276 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,040 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.