தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, “சட்ட ரீதியாக வழக்கை சந்தித்து உரிய நீதிமன்றம் போய் நாங்கள் வெளியில் வருமோம் என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கே.என்.நேரு மீதான வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். இதே அமலாக்கத் துறை ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தது. 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அந்த வழக்கில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?
2016ஆம் ஆண்டு நடுரோட்டில் 570 கோடி கொண்ட கண்டெய்னர் லாரி பிடிபட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 10 ஆண்டுகள் ஆன நிலையில் சிபிஐ எஃப்.ஐ.ஆர். கூட போடவில்லை.
இதுபோல் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் இந்த வழக்கை போட்டவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு சட்டரீதியாக இதை வெற்றி பெற்றுக் காட்டுவோம்.
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 41 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் கே.என்.நேரு. 41 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய வகையில் களத்தைச் சரிப்படுத்தி வைத்துள்ளார் என்ற பொறாமையில், வயிற்றெரிச்சலில் டெல்லியில் இருக்கும் பாஜக அரசு எடப்பாடியின் பேச்சைக் கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தேர்தலில் மிகப்பெரிய அடி அவர்களுக்கு விழப்போகிறது.
நேருவைப் பொறுத்தவரை பல வழக்குகளைச் சந்தித்து சட்டரீதியாக வெற்றி பெற்றுள்ளார். அவர் பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்துள்ளார். எந்தச் சோதனை வந்தாலும் இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு பயப்படுபவர் அல்ல. அடிக்க.. அடிக்க பந்து உந்துவதைப் போல நேருவை நீங்கள் துன்புறுத்த துன்புறுத்த இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பேராசிரியர் அன்பழகன் வழக்கு தொடர்ந்த அடிப்படையில் தான் நான் வழக்கு தொடர்ந்தேன் என்று இன்பதுரை பேசியது குறித்த கேள்விக்கு, ’19 வருடத்திற்குப் பிறகுதான் ஜெயலலிதா சிறை சென்றார். இந்த வழக்கு வேறு, அந்த வழக்கு வேறு’ என்று ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.
